Published : 13 Oct 2017 10:08 AM
Last Updated : 13 Oct 2017 10:08 AM

வணிக நூலகம்: தூண்டல் என்னும் தூண்டில்

ம் வாழ்வின் முக்கிய விஷயங்களாக நாம் கருதும் உடல்நலம், பொருட்செல்வம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை குறித்த முடிவுகளை சிறப்பாக எடுக்கத் தூண்டும் விஷயங்களை ஆராய்ச்சிகள் மூலம் அலசி ஆராய்ந்து சொல்லும் புத்தகம்தான், இந்த வருடம் பொருளாதாரத்திற்காக நோபல் பரிசினைப் பெற்ற “ரிச்சர்ட் ஹெச் தேலர்” மற்றும் “காஸ் ஆர் சன்ஸ்டீன்” என்ற இருவரும் இணைந்து எழுதியுள்ள “நட்ஜ்” (தூண்டுதல்) எனும் இந்தப் புத்தகம்.

மாற்றியமைத்தலின் பலன்!

நூற்றுக்கணக்கான பள்ளிகளில் உணவகம் நடத்தும் ஒரு பெண்மணி, ஒரு பல்பொருள் அங்காடிகள் மேலாண்மை நிபுணரின் அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை எங்கே வைப்பது என்பதில் பல மாறுதல்களை செய்தார். அவரவர்களே எடுத்து உண்ணும் வகையில் செயல்படும் உணவகத்தில் எந்த உணவு எங்கே வைக்கப்படுகின்றது என்பதைப் பொறுத்தே உணவு தேர்ந்தெடுப்பு என்பது இருக்கும் என எதிர்பார்த்து இதைச் செய்தார். உதாரணத்திற்கு சில பள்ளிகளில் பிரெஞ்ச் ப்ரையை கண்ணுக்கு தெரியும் இடத்திலும், சில பள்ளிகளில் கேரட்டை கண்ணுக்கு தெரியும் இடத்திலும் வைத்தனர். எதிர்பார்த்த மாதிரியே மாணவர்களின் உணவுத்தேர்வு என்பது உணவு எந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது என்பதை ஒட்டியே இருந்தது. இதன் மூலம் அவர்கள் என்ன விதமான உணவை உண்ணுகின்றார்கள் என்பதை இருபத்தி ஐந்து சதவிகிதம் வரை மாற்றியமைக்க முடிந்தது என்பதை அவர் கண்டறிந்தார்.

இந்த வகை மாற்றியமைத்தலின் மூலம் சத்தில்லாத (ஜங்க் புட்) உணவுப் பண்டங்களை குறைவாகவும், சத்துள்ள உணவுப்பொருட்களை அதிகமாகவும் உட்கொள்ளவைக்க முடியும் என்பதை அவர் கண்டறிந்தார். என்ன உணவு அவர்கள் உண்கின்றார்கள் என்பதை மறைமுகமாக தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பதே இந்த ஆய்வின் முடிவாக இருந்தது.

உணவோ, கட்டிடக்கலையோ, சேமிப்போ அது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் போது அதில் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகின்றது. உதாரணத்திற்கு ஒரு அலுவலகத்தை கட்டும்போது கழிப்பறைகள் எங்கே இருக்கின்றது என்பது அலுவலகத்தின் உற்பத்தித் திறனை வரையறை செய்யக்கூடும். கழிப்பறைக்கு செல்ல அலுவலகத்தில் பெரும்பாலானோரை கடந்து செல்லவேண்டிய நிலைமை இருந்தால் அங்கே இங்கே நின்று கதைபேசி (நல்லதோ/கெட்டதோ!) செல்வார்கள் இல்லையா?

முடிவெடுப்பதற்கான தூண்டுதல்!

உணவக உதாரணத்தில் நீங்கள் ஜங்க புட் சாப்பிடாதீர்கள் என்று மாணவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் அது இருக்கும் இடத்தை மாற்றிமட்டுமே வைத்தீர்கள். அதனால் நீங்கள் உணவில் அவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்தில் கைவைக்கவில்லை. அதே சமயம் அவர்கள் போஷாக்கான உணவை உட்கொள்ளவேண்டும் என்று நினைத்ததால் அவர்களை கவரும் வண்ணம் உணவுப்பொருட்கள் இருக்கும் இடத்தினை மாற்றியமைத்தீர்கள். அவர்களே நல்ல உணவை விரும்பி தேர்ந்தெடுத்தார்களே தவிர கட்டுப்பாடுகள் எதுவும் உணவகத்தில் இல்லை – இல்லையா?

இதே நிலையை அனைத்து விஷயங்களிலும் கொண்டுவர முடியும். மனிதர்கள் பல மோசமான கேடுவிளைவிக்கக்கூடிய முடிவுகளை எடுக்கவே செய்கின்றனர். அந்த முடிவுகளில் அவர்கள் முழுகவனம் செலுத்தினால் கட்டாயம் எடுக்கமாட்டார்கள் என்ற போதிலும், ஏன் எடுக்கின்றார்கள் என்று ஆராய்ந்தால் ஒன்றை நாம் புரிந்துகொள்ளலாம். ஜங்க் புட்டை தடை செய்வதன் மூலம் அடைய முடியாத வெற்றியை, பழங்களை கண்முன்னால் வைப்பதன் மூலம் அடைய முடியும் என்பதுதான் அது. கண்முன்னே இருப்பது இங்கே தூண்டுதல் ஆகின்றது.

ஊக்குவித்தல்!

சுதந்திரத்தை விரும்பும் மனிதர்கள் எவருமே கட்டுப்பாடுகளை விரும்புவதில்லை. என் வாழ்க்கை என் கையில் என்பதே அவர்களின் தாரக மந்திரம். அரசு இதை செய்யாதே என்று சொன்னால் நீ யார் இதைச் சொல்ல என்று கோபமாகக் கேட்பவர்கள் இவர்கள். ஆனால் இவர்களே கூட சரியான தூண்டுதல்கள் கடைபிடிக்கப்பட்டால் நல்லவற்றையே தேர்வு செய்வார்கள் என்கின்றன ஆய்வுகள். அரசாங்கம் மிகப்பெரியது. கசப்பு மருந்துகளை தரவே செய்யும் என்ற நிலையை மறந்து, நல்லவற்றை செய்ய அரசாங்கம் சின்னச்சின்ன தூண்டுதல்களை செய்ய ஆரம்பித்தாலே நல்ல விளைவுகள் கிடைக்கும். தண்டனை, தடை என்பதை கைவிட்டு ஊக்குவித்தல் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்தால் அரசாங்கம் பெரியது என்று இல்லாமல் துணைநிற்கும் சிறிய நண்பனாக இவர்களால் எடுத்துக்கொள்ளப்படும். பலரும் நல்ல விஷயங்களை தானாக முன்வந்து செய்ய ஆரம்பிப்பார்கள் என்கின்றன ஆய்வுகள்.

இருவேறு பரிணாமம்!

மனிதர்களாகிய நாம் சில விஷயங்களில் மிக தேர்ந்தவர்களாகவும் சில விஷயங்களில் வேலைக்காகதவர்களாகவும் இருக்கின்றோம். காது கேளாத நிலையில் இசைமேதை பீத்தோவான் தன்னுடைய ஒன்பதாவது சிம்பனியை சிறப்பாக இசை அமைத்தார். அதே சமயம் அவர் அடிக்கடி தன்னுடைய வீட்டு சாவியை தொலைத்துவிட்டு தேடுவார் என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்தானே!. அது எப்படி ஒருவர் ஒரு துறையில் கைதேர்ந்தவரகவும் மற்றொன்றில் கையாலாகாதவராகவும் இருக்கின்றார்? மூளை தானியங்கி செயல்பாடு மற்றும் ஆழ்ந்து சிந்திக்கின்ற செயல்பாடு இரண்டு பெரும்பிரிவாக அது செயல்படுவதாலேயே இது நடக்கின்றது.

செல்லும் விமானம் திடீரென ஆட ஆரம்பித்தால் பயப்படுவதும், சிறு நாய்க்குட்டியை கண்டால் மகிழ்ச்சிகொள்வதும் தானியங்கி செயல்பாடு. விமானம் ஆடுகின்றது. நீ சாகப்போகின்றாய் என்று எச்சரிப்பது தானியங்கி செயல்பாடு. அதனால் பயம் மனதைக் கவ்வுகின்றது. 37ஐ 411ஆல் பெருக்கினால் என்ன வரும் என்ற கேள்விக்கு பதில் சொல்வது ஆழ்ந்த சிந்தனை செயல்பாடு. இந்தப் புத்தகத்தை எழுதுவது ஆழ்ந்த சிந்தனை செயல்பாட்டினால் நடக்கும் செயல். ஆனால் புத்தகத்தில் எழுதக்கூடிய சில சிறப்பான விஷயங்கள் மற்றும் எண்ணங்கள் தலையில் தண்ணீர் ஊற்றி குளிக்கும் போது தோன்றுகின்றது.

தூண்டுதலின் செயல்பாடு!

மனித மூளை என்பது மந்தை மனப்பான்மையைக் கொண்டது. இதற்கு ஆதாரமாக தூண்டுதல்கள் எப்படி செயல்படுகின்றன என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம். புதியதாய் திருமணமான தம்பதியினர், அவர்களை சுற்றியிருக்கும் அவர்கள் வயதொத்த தம்பதியர் பலரும் குழந்தைபெறும் நிலை இருந்தால் வெகு சீக்கிரமே இவர்களும் குழந்தைபெற்றுக்கொள்வார்கள். குண்டாக இருக்கும் பல நண்பர்களைக் கொண்டவர்கள் நாளடைவில் குண்டாகிப்போனதுதான் வரலாறு. எல்லா ரேடியோ மற்றும் டிவி சேனல்களும் ஒரேமாதிரியான நிகழ்ச்சிகளை அடித்துப் புரண்டு தொகுத்துவழங்குவதும் மந்தை நிலையை நிரூபிக்கத்தான். நன்றாய் மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் ஒரு கூட்டமாகவும் மதிப்பெண் வாங்காதவர்கள் ஒரு கூட்டமாகவும் திரிவது மந்தை மனநிலையில்தான். மனித இனம் ஒன்றைப்பார்த்து மற்றொன்றைக் கற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் செய்கின்றது என்றால் என்ன அர்த்தம். தூண்டுதலால்தான் என்கின்றார்கள் ஆசிரியர்கள்.

இப்படி நாளைக்கான சேமிப்பு, முதலீடு, கொடுக்கல்-வாங்கல் போன்ற அனைத்துமே தூண்டுதல்களால் மாற்றியமைக்கக்கூடியவையே என்பதை பல்வேறு ஆராய்ச்சி சார்ந்த உதாரணங்களுடன் சொல்கின்றது இந்தப்புத்தகம். தனியாரானாலும் சரி, அரசாங்கமானாலும் சரி எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடுகளை விதிக்காமல் தூண்டுதல்களுக்கான சூழலை உருவாக்குவதன் மூலம் எண்ணிய எல்லாவற்றையும் நிகழ்த்த முடியும் என்கின்றார்கள் ஆசிரியர்கள்.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x