Published : 29 Oct 2017 11:40 AM
Last Updated : 29 Oct 2017 11:40 AM
இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால் குறுகிய காலத்தில் இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் 17 சதவீதம் பிடித்திருத்திருக்கிறது ஜியோமி இந்தியா. இந்த நிறுவனம் விளம்பரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை, விளம்பர தூதர்கள் இல்லை. தொடக்க காலத்தில் ஆன்லைன் விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தியது, தொழில் நுட்பத்தை குறைந்தவிலையில் அளித்தது என வெற்றிக்குப் பல காரணங்கள். இந்த நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் மனுகுமார் ஜெயின் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார்.
மீரட்டில் பிறந்தவர். ஐஐடி டெல்லியில் இன்ஜினீயரிங் மற்றும் ஐஐஎம் கொல்கத்தாவில் நிர்வாக படிப்பு முடித்தவர். மெக்கென்ஸி நிறுவனத்தில் ஆலோசகராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து ஜபாங் நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார். இரு ஆண்டுகள் அங்கிருந்தவர், அதில் இருந்து விலகி சில மாதங்களுக்கு பிறகு ஜியோமி நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார். மனுகுமார் ஜெயின் உடனான உரையாடலில் இருந்து..
ஒரு தொழில் முனைவோராக இருந்த பிறகு வேறு நிறுவனத்தில் எப்படி பணியாற்ற முடிந்தது?
ஜியோமி நிறுவனத்தில் இணைவதற்கு முன்பே அந்த நிறுவனத்தின் நிறுவனர்களுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. ஜியோமி நிறுவனத்தின் வளர்ச்சிக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தவிர இதுவும் (ஜியோமி இந்தியா) எனக்கு தொழில்முனைவு போலத்தான். இங்கு நான்தான் முதல் பணியாளர். ஆரம்பத்தில் சில காலம் என்னுடைய வீட்டில் இருந்து பணி செய்தேன். அதன் பிறகு 100 சதுர அடிக்கு ஒரு அலுவலகத்தை எடுத்தோம். இங்கு நான் மட்டுமே. நானே அலுவலகத்தை திறக்க வேண்டும். என்னை பார்ப்பதற்கு பல நிறுவனங்களின் தலைவர்கள் வந்தாலும், அவர்களுக்கு நானே காபி போட்டுதர வேண்டும். மேலும் அவர்களுடன் ரூ.100 கோடி, ரூ.200 கோடி என பெரிய தொகையிலான `டீல்’ பேச வேண்டும். ஆரம்ப கட்டத்தில் பலர் என்னை நம்பவில்லை. இது உண்மையான கம்பெனியா என்னும் சந்தேகம் கூட இருந்தது. இதையெல்லாம் கடந்துதான் இந்த நிலைமையை அடைந்திருக்கிறோம். அதனால் இதுவும் என்னுடைய சொந்த நிறுவனம் போலதான்.
பொதுவாக சீனப் பொருட்கள் தரம் குறைந்தவை என்னும் கருத்து இந்தியாவில் இருக்கிறது. அதனை எப்படி மாற்றினீர்கள்?
10 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த பொருட்கள் அனைத்தும் தரம் குறைந்தவையாக இருந்தன. அதனால் இப்படி ஒரு இமேஜ் உருவானது. ஆனால் சீனா என்பது உற்பத்தியை நம்பி இருக்கும் நாடு. அங்கு தரம் குறைவான பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. உயர்தரம் கொண்ட பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. அதனால் சீனப் பொருட்கள் அனைத்துமே தரம் குறைந்தவை என்பது உண்மை இல்லை. மக்களின் இந்த எண்ணத்தை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்தோம். விளம்பரங்கள் எடுக்கலாம். ஆனால் அவை ஒருவழிப்பாதை. விளம்பரங்களை விட மக்கள் எங்கள் பொருட்களை பிரசாரம் செய்ய வேண்டும் என நினைத்தோம். மொபைல் பயன்படுத்துபவர்களில் 85 சதவீதம் பேர் 35வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள். தரமான பொருட்களை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்பவர்கள். இந்தியா முழுவதும் ஜியோமி ஃபேன் கிளப் வைத்திருக்கிறோம். இதில் 20 லட்சம் பேர் விவாதிக்கிறார்கள். இவர்களுக்காக பிரத்யேக நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். இதன் மூலம் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குகிறோம். தவிர மற்ற நிறுவனங்களின் போன் தரம், ஆனால் அதில் பாதி விலையிலும் கொடுக்கிறோம்.
ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் ஏன் முடிவெடுத்தீர்கள். பிளிப்கார்டுடன் ஒப்பிடும் போது நீங்கள் மிகச் சிறிய நிறுவனம். எப்படி பிளிப்கார்ட் ஒப்புக்கொண்டது.?
வழக்கமாக டிஸ்ரிபியூட்டர் மூலம் விற்கும் போது பல கட்டங்களை தாண்டி வர வேண்டும். இதனால் 10,000 ரூபாய் ஸ்மார்ட்போனை 20,000 ரூபாய்க்கு விற்க வேண்டும். ஆனால் ஆன்லைன் மூலம் விற்கும் போது நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்கலாம். இதனால் விலை குறையும்.
நான் ஜபாங் நிறுவனத்தில் இருந்ததால் அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களுடனும் எனக்கு நேரடியாக பழக்கம் இருந்தது. அதனால் அவர்களுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த முடிந்தது. இந்தியாவில் நாங்கள் சிறிய நிறுவனமாக இருந்தாலும் சர்வதேச அளவில் நாங்கள் மிகப்பெரிய நிறுவனம் என்பதால் இதெல்லாம் ஒரு தடையாக இல்லை.
நீங்கள் தொடங்கிய போது போட்டி அதிகமாக இருந்திருக்குமே, அப்போது உங்களின் இலக்கு என்னவாக இருந்தது?
எங்களுடைய முதல் விற்பனை தொடங்கிய போது 300-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இருந்தன. அப்போது எங்களின் இலக்கு 10,000 போன்கள் மட்டுமே விற்க வேண்டும் என்பதுதான். இதற்கு காரணம் எங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 10,000 நபர்கள் மட்டுமே எங்களை பின் தொடர்ந்தார்கள். இவர்கள் வாங்கினால் போதும் என நினைத்தோம். ஆனால் அன்று 5 லட்சம் நபர்கள் ஆர்டர் செய்ய முன்வந்தார்கள். பிளிப்கார்ட் இணையதளம் முடங்கியது. முதல் ஆண்டு வரையில் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்தோம். அதன் பிறகு ஆந்திராவில் எங்கள் ஆலையை தொடங்கினோம். இப்போது எங்களால் ஒரு நொடிக்கு ஒரு போன் தயாரிக்க முடியும்.
உங்களது போனை தேவைப்படும் நேரத்தில் வாங்க முடியாது என்னும் கருத்து இருக்கிறது. என்ன செய்ய இருக்கிறீர்கள்?
முன்பு நாங்கள் இணையம் மூலம் மட்டுமே விற்று வந்தோம். ஆனால் இப்போது ரீடெய்ல் கடைகளுக்கும் சென்றுள்ளோம். கடந்த செப்டம்பரில் மட்டும் 40 லட்சம் போன்களை விற்றுள்ளோம். ஆனாலும் போதுமான சப்ளை இல்லை என ரீடெய்ல் நிறுவனங்கள் கூறுகிறார்கள். தேவை அதிகமாக இருப்பதால் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்துள்ளோம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இருந்தன. ஆனால் இப்போது மூன்று நிறுவனங்கள் மட்டுமே தப்பிக்கும் என தெரிகிறது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் நிலை என்ன?
தொலைத் தொடர்பு துறைக்கு ஏற்பட்ட நிலைதான் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ஏற்படும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தன. ஆனால் அதில் பல நிறுவனங்கள் இப்போது இல்லை. பல நிறுவனங்கள் தங்களை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராடி வருகின்றன. புதுமையை கொண்டு வரும் நிறுவனங்கள் மட்டுமே நீண்ட நாளைக்கு தாக்கு பிடிக்க முடியும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பல நிறுவனங்களுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது முதல் ஐந்து நிறுவனங்கள் 75 சதவீத சந்தையை வைத்திருக்கின்றன. அடுத்த நான்கு ஆண்டுகளில் முதல் நான்கு நிறுவனங்கள் வசம் 90 சதவீத சந்தை இருக்கக்கூடும்.
அடுத்து என்ன அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறீர்கள்?
ஜியோமி என்பது போன்கள் தயாரிக்கும் நிறுவனம் மட்டுமில்லை. நாங்கள் தொழில்நுட்பம், இ-காமர்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளிலும் செயல்படுகிறோம். சர்வதேச அளவில் ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட 40-க்கும் பொருட்களை விற்பனை செய்கிறோம். இந்தியாவிலும் பல ஆராய்ச்சிகளை செய்துவருகிறோம். ஆனால் அடுத்து என்ன அறிமுகப்படுத்தப் போகிறோம் என்பது குறித்து இப்போதைக்கு அறிவிக்க முடியாது.
karthikeyan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT