Published : 20 May 2023 12:21 PM
Last Updated : 20 May 2023 12:21 PM

ரூ.2,000 நோட்டுக்களை திரும்பப்பெறும் நடவடிக்கை சரியே - முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் பட்டியலிடும் 6 காரணங்கள்

முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் | கோப்புப்படம்

புதுடெல்லி: ரூ.2,000 நோட்டுக்களை திரும்பப்பெறும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை முமுவதும் சரியான ஒன்றே என்றும், அதன் பயன்பாடு குறைந்துள்ளதால் அவைகள் பதுக்கி வைப்பதற்காகவே முதன்மையாக பயன்படுகிறது என்றும் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன். இவர் ரிசவர் வங்கியின் ரூ.2,000 திரும்பப்பெறும் நடவடிக்கை ஏன் சரி என்று தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்களை விளக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவும் இட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

> பெரும்பாலான வரி ஏய்ப்பு சோதனைகளில் ரூ.2,000 நோட்டுக்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விதி 80-20 ன் படி, 80 சதவீத மக்கள் ரூ.2,000 நோட்டுக்களை சட்டபூர்வமாக சேமித்து வைத்திருந்தாலும், அவர்கள் அதன் மொத்த மதிப்பில் 20 சதவீதத்தை மட்டுமே சேமித்து வைத்திருக்கிறார்கள்.

மாறாக ரூ. 2,000 நோட்டுகளை வைத்திருப்பவர்களில் 20 சதவீதம் பேர் அதன் மொத்த மதிப்பில் 80 சதவீதத்தை (3 லட்சம் கோடி) பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

> ரூ.2,000 நோட்டுகள் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் பயன்படுத்தவில்லை என்பதால், இதனால் சாமானிய மக்களுக்கு பெரிய பாதிப்புகள் இருக்காது.

> டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்திருப்பதன் காரணமாக நேரடிப் பணங்களின் பயன்பாடு குறிப்பாக ரூ.2,000 நோட்டுக்களின் பயன்பாடு மிகவும் குறைந்திருக்கிறது.

> ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதால், இனி ரூ.500 நோட்டுகளும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் ரூ.2000 நோட்டுகளுக்கு மாற்றாக அமையலாம்.

> வரும் 2026-ம் ஆண்டுக்குள் தற்போதுள்ள நிலையில் இருந்து டிஜிட்டல் பரிமாற்றம் மூன்று மடங்கு அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது (பிசிஜி அறிக்கை). இதனால் பரிமாற்றத்திற்கான ரூ.2000 நோட்டுக்களின் தேவை மிகவும் குறைந்து விடும்.

> அனைத்திலும் முக்கியமாக, சட்டப்பூர்வமான பரிமாற்றத்திற்கு ரூ.2000 பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதால், (செப். 30க்கு பின்னரும் பயன்படுத்த முடியுமா என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்த வேண்டும் என்பது தற்போதைய எனது புரிதல்) நியாயமாக பரிமாற்றம் மேற்கொள்பவர்கள் அவற்றை மாற்றிக்கொள்ள முடியும்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாடு முழுவதும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றும், பொதுமக்கள் செப்டம்பர் 30-க்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ரூ.2000 நோட்டை திரும்பப் பெறும் முடிவுக்கு வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ‘ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவது ஏற்கெனவே நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவு சிறந்த நடவடிக்கை. இது மிகவும் வரவேற்கத்தக்கது’ என்று கூட்டமைப்புகள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x