Published : 19 May 2023 07:48 PM
Last Updated : 19 May 2023 07:48 PM

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி - செப்.30 கடைசி நாள்

புதுடெல்லி: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 ஆகும்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு: “2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும்.

எந்த ஒரு வங்கிக் கிளையிலும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது" என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கருப்புப் பணப் புழக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தத் தொடங்கியது. இதனால், சந்தையில் அவற்றின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6.73 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023, மார்ச் 31ம் தேதி 3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் இது 10.80 சதவீதமாகும். இந்தத் தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலேயே அவை வங்கிக்கு வரவில்லை என கருதப்படுகிறது. எனவே, அவற்றை வங்கிக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.கடந்த 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் முழுமையான அறிவிப்பு: ரிசர்வ் வங்கி சட்டம், 1934 பிரிவு 24(1)-ன் கீழ் 2016 நவம்பரில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் முதன்மை நோக்கம் அப்போது புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதாகும், மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறியது. அதனால், 2018-19-ல், 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளில் சுமார் 89% 2017 மார்ச் மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டன. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, 2018 மார்ச் 31 அன்று ரூ.6.73 லட்சம் கோடியாக (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) இருந்த நிலையில் 2023 மார்ச் 31 அன்று ரூ.3.62 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இது புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 10.8% மட்டுமே ஆகும். இந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் பொதுவாக பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவதில்லை. மேலும், பொதுமக்களின் நாணயத் தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் க்ளீன் நோட்டு கொள்கையின்படி, ரூ.2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். ரிசர்வ் வங்கி 2013-2014 ஆம் ஆண்டில் இதேபோன்று ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது எந்த வங்கிக் கிளையிலும் மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம். வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது தற்போதைய அறிவுறுத்தல்கள் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்ட விதிகளுக்கு உட்பட்டது.

வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, 2023 மே 23 முதல் எந்த வங்கியிலும் ரூ.20,000/- வரையிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.

பொதுமக்களுக்கு போதுமான அவகாசம் வழங்கும் வகையில், அனைத்து வங்கிகளும் 2023 செப்டம்பர் 30 வரை ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் அல்லது மற்ற நோட்டுகளாக மாற்றும் வசதியை வழங்க வேண்டும். வங்கிகளுக்கு தனி வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000/- வரை மாற்றுவதற்கான வசதி 2023 மே 23 முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களும் வழங்கப்படும்.

2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் 2023 செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) பற்றிய ஆவணம் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் தகவலுக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x