Published : 18 May 2023 06:31 AM
Last Updated : 18 May 2023 06:31 AM

ஹிண்டன்பர்க் விவகாரம்: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய செபிக்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம்

கோப்புப்படம்

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து கடந்த ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. அதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த மக்கள் பாதிப்பை எதிர்கொண்டனர்.

இதையடுத்து, பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி) விதிமுறைகள் குறித்தும், பங்குச் சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

மேலும், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி 2 மாதங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு செபிக்கு உத்தரவிட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி சாப்ரே தலைமையிலான குழு, தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டது. ஆனால், விசாரணையை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கக் கோரி செபி மனு தாக்கல் செய்தது. அந்த மனு தொடர்பான விசாரணை நேற்று நடந்தது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீண்ட காலத்துக்கு அவகாசம் வழங்க முடியாது. 3 மாதங்கள் அவகாசம் வழங்குகிறோம். வரும் ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் வழக்கு விசாரணை நிலவரம் குறித்து தொடர்ந்து நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x