Published : 17 May 2023 05:00 PM
Last Updated : 17 May 2023 05:00 PM
ப்ரூசல்ஸ்: ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்த எண்ணெய்யை சுத்திகரித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்தியா விற்பனை செய்வதால் இந்தியாவிடமிருந்து இனி எரிபொருள் இறக்குமதி செய்யக் கூடாது என்று திடீரென ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் எழுப்பியுள்ள போர்க்கொடிக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
வங்கதேசம், ஸ்வீடன், பெல்ஜியம் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடைசியாக பெல்ஜியம் வந்தடைந்தார். பெல்ஜியம் வந்த அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில இந்தியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எதிராக குரல் கொடுக்கப்படுவதற்கு விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில இந்தியா தான் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்து அதை டீசல் உள்ளிட்ட பல்வேறு எரிபொருள், எண்ணெய்யாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கிறது என்று குற்றஞ்சாட்டின. மேலும், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் இந்திய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறின.
இந்நிலையில், பெல்ஜியம் தலைநகர் ப்ரூசல்ஸில் பேசிய ஜெய்சங்கர், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் போரெலுக்கு இதன் நிமித்தமாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். "ஐரோப்பிய ஒன்றிய சட்ட திட்டங்களை ஆராய்ந்து பாருங்கள். அது, ரஷ்ய கச்சா எண்ணெய்யை மூன்றாவது நாட்டில் வேறு எண்ணெய்யாக சுத்திகரிக்கப்பட்டால் அது ரஷ்ய எண்ணெய் அல்ல என்று கூறுகிறது. கவுன்சில் சட்டதிட்டம் 833/2014-ல் இது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவ்வாறாக மூன்றாம் நாட்டில் சுத்திகரிக்கப்படும் எண்ணெய் ரஷ்ய எண்ணெய்யாக எப்படி கருதப்படும்" என்று வினவினார்.
ஏற்கெனவே, உக்ரைன் படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வர்த்தகத்திற்கு தடை விதிக்க மேற்கத்திய நாடுகள் பல்வேறு வகையிலும் அழுத்தம் தருவதையும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளானார். மேலும், ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள எண்ணெய் வர்த்தகம் மிக மிக சொற்பமானது. வெறும் 12 முதல் 13 பில்லியன் டாலர் அளவிலானதே என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, "ரஷ்யாவிடமிருந்து இந்திய இறக்குமதியை உறுதி செய்ய ரஷ்யா ஃபாஸ்ல் ஃபியூவல் டிராக்கர் என்ற இணைய பக்கத்தில் நாடு வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள எண்ணெய் இறக்குமதி அளவை கண்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT