Published : 17 May 2023 06:14 AM
Last Updated : 17 May 2023 06:14 AM
கோவை: கோவையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு உதவும் வகையில் மேலும் ஒரு இணைப்பு விமான சேவை ஒரு வார காலத்துக்குள் தொடங்கப்பட உள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, கென்யா, நெதர்லாந்து, துருக்கி, தாய்லாந்து, பிரான்ஸ், மஸ்கட், துபாய், கத்தார் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு செல்பவர்களுக்கு உதவும் வகையில் ஏர் இந்தியா விமான நிறுவனம் சார்பில் மும்பைக்கு இணைப்பு விமான சேவை கடந்த மே 3-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த விமானம் கோவையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படுகிறது.
இந்நிலையில்,மேலும் ஒரு இணைப்பு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து, கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் கூறுகையில், ‘‘விஸ்தாரா நிறுவனம் ஒரு வாரத்துக்குள் இச்சேவையை தொடங்க உள்ளது.
கோவையில் இருந்து இரவு 9.30 மணியளவில் நேரடியாக மும்பைக்கு இயக்கப்படும் இந்த விமானம் அங்கு தரையிறங்கியவுடன் உடனடியாக பல்வேறு நாடுகளுக்கு காலதாமதமின்றி விமான சேவையை பெறலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT