Published : 11 May 2023 02:27 PM
Last Updated : 11 May 2023 02:27 PM
சான் பிரான்சிஸ்கோ: நடப்பு ஆண்டில் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
டெக் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் கடந்த ஜனவரியில் சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் நிதிநிலை சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் போனஸ், பங்கு ஒதுக்குதல், பணி உயர்வு போன்றவை இந்த ஆண்டு இருக்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் இயங்குதள மாற்றம் மற்றும் மாறி வரும் பொருளாதார சூழல் காரணமாக இந்த முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா, ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்ததாகவும் தகவல். அதில் செயற்கை நுண்ணறிவு திறன் சார்ந்த தொழில்நுட்ப மாறுதல் குறித்தும் தெரிவித்துள்ளாராம்.
மைக்ரோசாப்ட் நிறுவனம், ஓபன் ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி மற்றும் டால்-இ போன்ற லாங்குவேஜ் மாடல்களை வடிவமைத்து, வெளியிட்டுள்ளது. ஏஐ பயன்பாடு தான் டெக் உலகில் முதன்மை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா தொற்று பரவலுக்கு பின்னர் உலகம் முழுவதும் பல முன்னணி டெக் நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. ட்விட்டர், கூகுள், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள் இதில் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT