Published : 04 May 2023 02:07 PM
Last Updated : 04 May 2023 02:07 PM
புதுடெல்லி: வரும் மே 9-ஆம் தேதி வரை அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்வதாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனியார் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் திவால் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. நேற்று முன்தினம், இந்நிறுவனம் தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு அளித்தது. அமெரிக்காவில் பிடபிள்யூ என்றழைக்கப்படும் பிராட் அண்ட் விட்னி நிறுவனத்திடமிருந்து விமான இன்ஜின்கள் முறையாக விநியோகிக்கப்படாததால் விமான சேவையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம் என்றும் இதனால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம், விமான நிலையங்களுக்கான கட்டணம் செலுத்த முடியாத அளவுக்கு அந்நிறுவனம் கடும் இழப்பை சந்தித்துள்ளது.
முன்னதாக, வரும் மே 5 ஆம் தேதி வரை தன் விமான சேவையை முற்றிலும் நிறுத்துவதாக கோ ஃபர்ஸ்ட் அறிவித்திருந்த நிலையில், தற்போது இது மே 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செயல்பாட்டு காரணங்களால் மே 09, 2023 வரையிலான கோ ஃபர்ஸ்ட் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். விமானங்கள் ரத்தால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் உங்களிடம் மன்னிப்புக் கோருகிறோம். விரைவில் டிக்கெட் தொகை ரீஃபண்ட் செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக டிக்கெட் தொகையை திருப்பி அளிக்குமாறு கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT