Published : 03 May 2023 04:20 AM
Last Updated : 03 May 2023 04:20 AM

மாம்பழ சீசன் தொடங்கியும் களைகட்டாத வியாபாரம் - எதிர்பார்த்த ரகங்கள் விற்பனைக்கு வரவில்லை

மதுரை: மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் போதிய அளவு பழங்கள் விற்பனைக்கு வராததால் சீசன் இன்னும் களைகட்டத் தொடங்கவில்லை.

இந்த ஆண்டு மாமரங்களுக்கு ஏற்ற மழையும், தட்ப வெப்ப நிலையும் அமையாததால் மாங்காய் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை. அதனால், மாம்பழ சீசன் தொடங்கியும் தற்போது வரை வியாபாரம் களைகட்டவில்லை. மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வரை விளைந்து கிடைக்கும் மாம்பழங்கள் சுவையும், தரமும் மிக்கவை.

இந்தப் பகுதிகளில் இன்னும் மாங்காய் பறிப்பு தீவிரமாகவில்லை. அதனால், இப்பகுதி மாம்பழங்கள் மதுரை நகரில் கடைகளுக்கு விற்பனைக்கு வரவில்லை. வெளிமாவட்ட மாம்பழங்கள் மட்டுமே தற்போது விற்பனைக்கு வருவதால் வியாபாரிகள் கூடுதல் விலை வைத்து விற்கிறார்கள். ஒரு கிலோ மாம்பழம் ரூ.60 முதல் ரூ.150 விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து மதுரை யானைக்கல் மாம்பழ வியாபாரி வீரணன் கூறுகையில், ‘‘ஊமச்சிக்குளம், நத்தம் பகுதியில் இருந்து வரக்கூடிய பழங்கள் குறைவுதான். அந்தப் பழங்கள் மிகவும் தெளிவாக இருக்கும். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியிலிருந்தும் மாம்பழங்கள் விற்பனைக்கு அதிக அளவில் வரும். அல்போன்சா மாம்பழம் தற்போது வரை விற்பனைக்கு வரவில்லை. உள்ளூர் மாம்பழங்கள் வரத்து அதிகமானால் இன்னும் மாம்பழங்களின் விலை குறையும்,’’ என்றார்.

மகசூல் குறைய காரணம் என்ன?

கடந்த ஆண்டு சீசனில் மருந்து அடிக்காமல் விட்ட இடங்களில் மகசூல் சிறப்பாக உள்ளது. மருந்து அடித்த இடங்களில் மகசூல் குறைந்துள்ளது. மேலும், ஆஃப் சீசனில் (பருவம் இல்லாத காலங்கள்) கல்டர் என்ற மருந்து தெளித்து மகசூல் எடுத்த இடங்கள், அதைச் சுற்றியுள்ள தோட்டங்களில் மாங்காய் விளைச்சல் நடப்பாண்டு குறைந்துள்ளது. ஆஃப் சீசனில் மாங்காய்கள்கூட கிலோ ரூ.100 வரை விலை போகும். அதுபோன்ற ஆஃப் சீனில் மா வியாபாரம் மூலம் சம்பாதிக்கிற விவசாயிகளும் இருக்கிறார்கள்.

நடப்பாண்டு 100 மரங்கள் காய்க்கிற இடங்களில் இதுவரை 40 மரங்களில் மட்டுமே காய்த்துள்ளன. மாங்காய் விளைச்சல் அதிகமிருக்கும் மாவட்டங்களில் முதற்கட்டமாக உற்பத்தி குறைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய ஆய்வு தொடங்கியிருக்கிறது. அதன் முடிவு வந்த பிறகு தான் விளைச்சல் குறைந்ததற்கான உறுதியான காரணங்களைத் தெரிவிக்க முடியும்,’’ என தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x