Published : 30 Apr 2023 04:17 AM
Last Updated : 30 Apr 2023 04:17 AM
சென்னை: மே 5-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டை முன்னிட்டு 4-ம் தேதி ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது. அதை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோட்டில் மே 5-ம் தேதி நடைபெறும் 40-வது வணிகர் தினம் மற்றும் வணிகர் உரிமை முழக்க மாநாடு தொடர்பாக தென் சென்னை மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், சென்னை அசோக் நகரில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.ஆர்.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநாடு தொடர்பாக விளக்க உரையாற்றினார். கூட்டத்தில், சென்னை மண்டலத்திலிருந்து 60 ஆயிரம் வணிகர்கள் மாநாட்டில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா கூறியதாவது: மாநாட்டுப் பந்தல் 20 ஏக்கர் பரப்பளவில் கோடை வெயிலுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாநாட்டுக்கு வரும் வணிகர்கள் அனைவருக்கும் 50-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டையொட்டி மே-4-ம் தேதி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாநாட்டு திடலில் ஷாப்பிங் திருவிழாவை திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். தமிழக அனைத்து சிறு, குறு நிறுவனங்கள், தங்களின் நிறுவன பொருட்களை காட்சிப்படுத்த 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வெ.கோவிந்த ராஜுலு, பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநிலத் துணைத் தலைவர்கள் வி.ஆனந்தராஜ், சா.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT