Published : 10 Sep 2017 03:18 PM
Last Updated : 10 Sep 2017 03:18 PM
கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு பொருளாதார அறிக்கையை வெளியிட்டது. ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு வரையான ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக உள்ளது. கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதமாக இருந்தது. அதன்பிறகு ஜூன் காலாண்டில் 7.9 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் காலாண்டில் 7.5 சதவீதமாகவும், டிசம்பர் காலாண்டில் 7.0 சதவீதமாகவும், மார்ச் காலாண்டில் 6.1 சதவிகிதமாகவும் இருந்து வந்தது. தற்போது 5.7 சதவீதமாக உள்ளது.
ஜிடிபி வளர்ச்சி விகிதம் சீராக குறைந்து வந்துள்ளது என்பதை காட்டுகிறது. ஆனால் பணவீக்கம் மிக குறைவாக உள்ளது. அதாவது மிக குறைந்த அளவான 1.5 சதவீதத்தை எட்டியுள்ளது. வர்த்தக பற்றாக்குறை மற்றும் நிதி பற்றாக்குறை இரண்டுமே சமாளிக்க கூடிய வகையில் இருக்கிறது. இவை இரண்டுமே அந்நிய செலாவணியையோ அல்லது முதலீடுகளையோ பாதிக்காது. மேலும் ஒன்றரை ஆண்டாக வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்துள்ளது.
நிதிச் சந்தையிலும் நேரடி முதலீட்டிலும் டாலர் முதலீடு இந்திய சந்தைக்கு அதிகம் வந்து கொண்டிருந்தது. பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த காலத்தில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருந்தது. ஏன், கச்சா எண்ணெய் விலை கூட நிலையாக ஓரளவு சமாளிக்கக் கூடியதாக இருந்தது. பருவமழை சீராக இருந்தது. இப்படி பேரியல் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய அனைத்து சூழல் காரணிகளும் நேர்மறையாக இருந்த போதிலும் நம்முடைய பொருளாதார வளர்ச்சி விகிதம் நேர்மறையாக இல்லை. இந்த அனைத்து சூழல் காரணிகளையும் வளர்ச்சி விகிதமாக மாற்றமுடியவில்லை என்பது வருத்தத்துக்குரியது.
வளர்ச்சி விகிதம் இந்த நிதியாண்டில் 7 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என்று எச்சரிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால் ஒட்டுமொத்தமாக 1 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி விகிதத்தில் இழப்பு ஏற்படும். 1 சதவீதம் என்பது நாட்டு வருமானத்தில் ரூ.1.5 லட்சம் கோடியாகும். இவ்வளவு பெரிய தொகைக்கு இழப்பு ஏற்படும். இந்த இழப்பு நாட்டு வருமானத்தில் ஏற்படும் இழப்பு மட்டுமல்ல. கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாவது தடைபடும்.
தற்போது வெளியாகியுள்ள பொருளாதார காரணிகளை உற்றுநோக்கும்போது உற்பத்தித் துறை வளர்ச்சி 1.2 சதவீதமாக இருப்பது தெரிகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான வளர்ச்சி விகிதமாகும். உற்பத்தித் துறை வளர்ச்சியை அளவிடுவதற்கு புதிய முறையை கையாண்டதிலிருந்து தற்போதுதான் வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஜிஎஸ்டி அமல்படுத்த இருப்பதால் உற்பத்தித் துறை செயல்பாடுகளை நிறுத்தி வைத்திருந்ததால் வளர்ச்சி குறைந்திருக்கலாம். இதன் பாதிப்பு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் தெரிய வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் வங்கிகள் வழங்கியுள்ள கடன் அளவு 1.8 சதவீதமாக குறைந்துள்ளது. நிறுவனங்களுக்கு அல்லது உற்பத்தி துறைக்கு வழங்கி வரும் கடன் அளவு கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எதிர்மறையாக உள்ளன. ரீடெய்ல் கடன்களை தவிர்த்து வீட்டுக்கடன், தனிநபர் கடன் ஆகியவையும் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடன் வழங்கும் சூழல் மிகவும் குறைந்துள்ளது. உற்பத்தித்துறை வளர்ச்சி குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஜிடிபி-யை இரண்டு வகைகளில் அளவிட முடியும். உற்பத்தியின் மூலம் அளவிடலாம் அல்லது செலவிடும் வகையில் அளவிட முடியும். நம்முடைய அனைத்து செலவினங்களையும் ஒன்றாக சேர்த்து பார்க்கும்போது அது நுகர்வாக இருக்கலாம் அல்லது புதிய தொழிற்சாலைகளில் நாம் செய்யும் முதலீடாக இருக்கலாம் அல்லது அரசு செலவினங்களாக இருக்கலாம். இதில் குறிப்பாக முதலீடுகள் மட்டுமே ஜிடிபி-யை உயர்த்தும் முக்கிய காரணியாக இருக்க முடியும். அதாவது தனியார் துறையில் முதலீடுகள் அதிகம் இருக்க வேண்டும். தற்போதைய சூழலில் முதலீடுகள் 1.5 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த முதலீடு குறியீட்டின் வளர்ச்சி குறைவாக இருக்கிறது. `மேக் இன் இந்தியா’ மூலமாக உற்பத்தித்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும் `தொழில் புரிவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்காக மின்சாரம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய போதிலும் முதலீடுகள் பெருமளவுக்கு வரவில்லை என்பதுதான் நிதர்சனம். முதலீடுகளை அதிகப்படுத்த இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதைத்தான் இது காட்டுகிறது.
அனைவருக்கும் வீடு, ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியது தனியார் தொழில்முனைவோர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. ஆனால் இவர்களுக்கு கடன் உள்ளிட்ட உதவிகள் எளிதாக கிடைக்க வழிவகை செய்வது முக்கியமாக உள்ளது.
வலுவான நிலையில் ரூபாய்
உள்நாட்டு நிறுவனங்களுக்கு இருக்கக்கூடிய அடுத்த சவால் ரூபாயின் மதிப்பு வலுவான நிலையில் இருப்பது. கடந்த ஜனவரியிலிருந்து அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் ரூபாயின் மதிப்பு 7 சதவீதம் அளவுக்கு உயர்ந்து வலுவான நிலையில் உள்ளது. அதாவது சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளின் கரன்ஸிகளை விடவும் ரூபாயின் மதிப்பு வலுவாக இருக்கிறது. இது நம்முடைய ஏற்றுமதி சூழலை நேரடியாக பாதிக்கும். 18 மாத கால எதிர்மறை வளர்ச்சிக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து நம் நாட்டினுடைய ஏற்றுமதி வளர்ச்சி அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது ரூபாயின் மதிப்பு வலுவான நிலையில் இருப்பதால் ஏற்றுமதி வளர்ச்சி நிச்சயமாக குறையும்.
பணமதிப்பு நீக்கம்
இந்த காரணிகளை விடவும் பணமதிப்பு நீக்கத்தால் தொடர்ந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருவதை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த நிதியாண்டில் முதல் ஆறு மாத காலத்தில் அதாவது பணமதிப்பு நீக்கத்துக்கு முன்பு ஜிடிபி வளர்ச்சி 7.7 சதவீதமாக இருந்தது. தற்போது ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 5.7 சதவீத ஜிடிபி வளர்ச்சியே இருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தால் முறையற்ற மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளே ஜிடிபி வளர்ச்சி குறைந்ததற்கு முக்கிய காரணம். ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் முதலீடுகளும் குறைந்துவிட்டன. செலவினமும் குறைந்துவிட்டது. வேலைவாய்ப்புகளும் உருவாகவில்லை. விவசாயத்துறையின் உண்மையான ஜிடிபியை விட பெயரளவிலான ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கிறது. இது எதை உணர்த்துகிறது என்றால் விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளதைதான் இந்த குறியீடு காட்டுகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர்த்தும் இலக்கு வெறும் கனவாக இருக்கும்.
இருப்பினும் வரும் காலாண்டுகளில் பொருளாதாரம் மேல் எழுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு உற்பத்தித் துறை செயல்பாடுகளும் தனியார் முதலீடுகளும் அதிகரிக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் தற்போதைய அளவில் அனைத்து இருள் மேகங்கள் சூழ்ந்துள்ளது போல்தான் இந்தியா பொருளாதார சூழல் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT