Published : 28 Apr 2023 04:49 AM
Last Updated : 28 Apr 2023 04:49 AM
சென்னை: வருமான வரி செலுத்தாதவர்களுக்கு வட்டி, அபராதம் வசூலிப்பதுடன் வழக்கு தொடர்ந்து சிறை தண்டனையும் பெற்றுத் தரப்படும் என்று வருமான வரித் துறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்துஅவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2022-23-ம் ஆண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் நேரடி வரி நிகர வசூல் ரூ.1 லட்சத்து 08 ஆயிரத்து 364 கோடி. இது 20 சதவீதமாகும். அகிலஇந்திய அளவில் நிகர வரி வசூல்18 சதவீதம்தான். ரீபண்ட் இல்லாமல் மொத்த வரி வசூல் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 400 கோடி. இது 23 சதவீதம்.
வரி செலுத்துவோர் எண்ணிக்கை 67 லட்சத்தில் இருந்து 73 லட்சமாக அதிகரித்துள்ளது. வருமானத்தில் வரி பிடித்தம் தமிழகத்தில் சிறப்பாக இருக்கிறது. நாட்டில் வரி வசூலில் நாம் 4-வது இடத்திலும், டிடிஎஸ் வளர்ச்சியில் 3-வது இடத்திலும் இருக்கிறோம்.
வரி பிடித்தம் செய்வோருக்காக https://tnincometax.gov.in என்ற இணையதளத்தில் வருமானத்தில் வரி பிடித்தம் தொடர்பான 16 தலைப்புகளில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
காரைக்குடியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான வருமான வரிக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, நாட்டிலேயே முதன்முறையாக வரி அருங்காட்சியமாக மாற்றப்படுகிறது. கரூர், திண்டுக்கல், உதகையில் புதிய வருமான வரி அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன.
வருமான வரி செலுத்தாதவர்களுக்கு வட்டி, அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்தாண்டு முதன்முறையாக 7 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரி செலுத்த மறுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர தயங்கமாட்டோம். இவ்வாறு ரவிச்சந்திரன் ராமசாமி தெரிவித்தார்.
வருமான வரித்துறை தலைமைஆணையர்கள் ஜெயந்தி கிருஷ்ணன், ரத்தினசாமி ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT