Published : 28 Apr 2023 07:08 AM
Last Updated : 28 Apr 2023 07:08 AM

ரூ.5.65 லட்சம் கோடி மதிப்பிலான மைக்ரோசாஃப்ட் - ஆக்டிவிசன் ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் தடை

பிராட் ஸ்மித்

வாஷிங்டன்: ஆக்டிவிசன் பிலிசார்ட் அமெரிக்காவைச் சேர்ந்த கேமிங் நிறுவனம் ஆகும். ‘கால் ஆஃப் டூட்டி’, ‘கேண்டிகிரஷ்’ ஆகியவை இந்நிறுவனத்தின் பிரபலமான வீடியோ கேம்கள். இந்நிறுவனத்தை 69 பில்லியன் டாலருக்கு (ரூ.5.65 லட்சம் கோடி) வாங்கஇருப்பதாக கடந்த ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்தது.

இது மைக்ரோசாஃப்ட் நிறுவன வரலாற்றில் மிகப் பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பான இறுதிகட்ட செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், இந்த ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது. கிளவுட் கேமிங் சந்தையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெரும் பங்கு வகித்து வருகிறது.

இந்நிலையில், ஆக்டிவிசன் பிலிசார்ட் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் வசம் செல்லும்பட்சத்தில் கிளவுட் கேமிங் சந்தையில் முழுமையான ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் மாறும்.

இதனால், ஏனைய நிறுவனங்களுக்கு வாய்ப்புகிடைக்காமல் போகும் என்பதன் அடிப்படையில் பிரிட்டனின் நிறுவனப் போட்டி மற்றும் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் இந்த ஒப்பந்தத்துக்கு தடை விதித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்க வேண்டும்.தற்போது பிரிட்டன் தடைவிதித்துள்ள நிலையில் சர்வதேச அளவில் இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

பிரிட்டனின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் தெரிவித்துள்ளார். “மைக்ரோசாப்ட் நிறுவனம் 40 ஆண்டுகளாக பிரிட்டனில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் பிரிட்டனின் இந்த முடிவு அந்நாட்டின் மீதானஎங்களது நம்பிக்கையை தகர்த்துள்ளது.

பிரிட்டனைவிடவும் ஐரோப்பிய ஒன்றியம் தொழில் செய்வதற்கான ஏற்ற இடம் என்பதை இது உணர்த்துகிறது. எங்கள் நிறுவன வரலாற்றில் இது இருண்ட நாள். இந்த நடவடிக்கை பிரிட்டனுக்கும் மோசமானதாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x