Published : 24 Apr 2023 11:06 AM
Last Updated : 24 Apr 2023 11:06 AM

ஏப்.24, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.24) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.44,920-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் கடந்த இரண்டு நாட்களாக விற்பனை களைகட்டியது. மேலும், தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்தும் இருந்தது. நகைவாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள்கிழமை) கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,615-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,920-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,768-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,000-ஆக இருக்கிறது.

2 நாட்களில் சுமார் 20 டன் தங்கம் விற்பனை: தமிழகத்தில் அட்சய திருதியையொட்டி நேற்றும் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 2 நாட்களில் சுமார் 20 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. நடப்பாண்டு அட்சய திருதியை திதி நேற்று முன்தினம் காலை 7.49 மணிக்குத் தொடங்கி நேற்று காலை 7.47 மணி வரை நீடித்தது.

தமிழகத்தில் 35,000-க்கும் அதிகமான நகைக் கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 6,000-க்கும் அதிகமான கடைகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் நகைகளை வாங்க மக்கள் குவிந்தனர். இரண்டாவது நாளாக நேற்றும் அதிகாலையிலேயே நகைக் கடைகள் திறக்கப்பட்டன.

பங்குச் சந்தை விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் நிர்ணயிக்கப்பட்ட விலையே நேற்றும் நீடித்தது. அதன்படி, சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,605-க்கும் ஒரு பவுன் ரூ.44,840-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.48,472-க்கு விற்பனையானது. அட்சய திருதியையொட்டி தொடர்ந்து 2 நாட்கள் தங்கம் விலை குறைவாக இருந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சென்னை தங்கம்மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு 2 நாட்கள் அட்சய திருதியை இருந்ததால், இரண்டு நாட்களும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 10 முதல் 15 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளது’’ என்றனர்.

நகைகள் விற்பனையைப் பொறுத்தவரை, சுமார் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பில், 20 டன் நகைகள் விற்கப்பட்டதாக நகைக் கடை உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x