Published : 15 Apr 2023 03:39 PM
Last Updated : 15 Apr 2023 03:39 PM

ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம்; ஷாப்பிங் செய்யலாம் - 3 நிமிடத்தில் கிட்டும் சிங்காரச் சென்னை அட்டையின் சிறப்பு அம்சங்கள்

சிங்காரச் சென்னை அட்டை

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சிங்காரச் சென்னை அட்டை மூலம் வங்கிக் கணக்கு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து சிங்காரச் சென்னை அட்டையை (National Common Mobility Card - தேசிய பொது இயக்க அட்டை) அறிமுகம் செய்துள்ளது. இந்த சிங்காரச் சென்னை அட்டை மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் எம்.எம்.ஆர்.டி.ஏ மும்பை லைன், பெங்களூரு மெட்ரோ, டெல்லி மெட்ரோ மற்றும் விமான நிலையம், கான்பூர் மெட்ரோ, மும்பை மற்றும் கோவாவில் கடம்பா போக்குவரத்து பேருந்துகள் ஆகிய இடங்களில் பயன்படுத்த முடியும்.

எதிர்காலத்தில், பேருந்து புறநகர் ரயில்வே, சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சிட்டி மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிரிவுகளில் பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் இந்த ஒற்றை அட்டையைப் பயன்படுத்தலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தவிர்த்து பல்வேறு வசதிகளும் இந்த அட்டையில் உள்ளன. அவை:

  • குறைந்தபட்ச KYC கொடுத்தால் ரூ.10 ஆயிரம் வரையிலும், முழு KYC கொடுத்தால் ரூ.2 லட்சம் வரையிலும் இந்த அட்டையில் வைத்துக் கொள்ளலாம்.
  • முழு KYC கொடுத்தால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதியை பெற்றுக் கொள்ளலாம்.
  • இதன் மூலம் வங்கிக் கணக்கு இல்லாமல் ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம்.
  • ஆன்லைன் மூலம் பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
  • தினசரி ரூ.50 ஆயிரம் வரை இந்த அட்டை மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

பெறுவது எப்படி? - சென்னையில் உள்ள கோயம்பேடு, சென்ட்ரல், விமான நிலையம், உயர் நீதிமன்றம், ஆலந்தூர், திருமங்கலம், கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த அட்டை கிடைக்கிறது. வெறும் 3 நிமிடத்தில் இந்த அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்து அட்டையை பெற்ற சதீஷ் லெட்சுமணன் என்ற பயணி கூறுகையில், "கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் அட்டையை வாங்கினேன். விண்ணப்பப்படிவத்தில் பெயர், மொபைல் எண், பான் கார்டு எண் மற்றும் ஓர் அரசு அடையாள அட்டையின் எண்ணை கொடுத்த உடன் அட்டையைக் கொடுத்துவிட்டார்கள்" என்றார்.

ரீசார்ஜ் செய்வது எப்படி? - அட்டைகளை ரீசார்ஜ் செய்வதற்கு https://transit.sbi/swift/customerportal?pagename=cmrl என்ற பிரத்யேக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இருப்புத் தொகையை தெரிந்துகொள்ளலாம். மேலும், வங்கி சேமிப்பு கணக்குகள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், இந்த அட்டை பயன்படுத்துபவர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்புக் கட்டணம் எதுவும் வசூல் செய்யப்படாது. > சிங்கார சென்னை அட்டை தொடர்பான முழு விவரங்களுக்கு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x