Published : 14 Apr 2023 08:09 AM
Last Updated : 14 Apr 2023 08:09 AM
மும்பை: தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான குளிர்பான தயாரிப்பு நிறுவனமான காளிமார்க்கை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் தற்போது குளிர்பான சந்தையில் கால் பதித்து வருகிறது. ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பியூர் டிரிங்க்ஸ் குழுமத்திடமிருந்து கேம்ப கோலாவை வாங்கியது. கேம்ப கோலா 1970-80களில் இந்தியாவின் பிரபலமான குளிர்பான பிராண்டாக திகழ்ந்தது. 1990-களில் உலகமயமாக்கல் நடவடிக்கைக்குப் பிறகு கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களின் குளிர்பானங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்த நிலையில் கேம்ப கோலாவின் சந்தை சரிந்தது.
இந்நிலையில், தற்போது கேம்ப கோலாவை ரிலையன்ஸ் குழுமம் வாங்கி, மீண்டும் அதை இந்தியாவின் முதன்மை குளிர்பான பிராண்டாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
தற்போது மற்ற நிறுவனங்களைவிட 30 சதவீத குறைவான விலையில் கேம்ப கோலா குளிர்பானத்தை ரிலையன்ஸ் விற்பனை செய்து வருகிறது. இதனால் கோகோ கோலா, பெப்சி நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
தனது குளிர்பான சந்தையை விரிவாக்கும் முயற்சியாக கேம்ப கோலாவைத் தொடர்ந்து குஜராத்தின் புகழ்பெற்ற குளிர்பான நிறுவனமான சோஸ்யோ ஹஜூரியின் 50 சதவீதப் பங்குகளை இவ்வாண்டு ஜனவரி மாதம் ரிலையன்ஸ் வாங்கியது.
இந்நிலையில், கேம்ப கோலா தயாரிப்பு, விநியோகம், விற்பனை சார்ந்து உள்ள சிக்கலைகளை தீர்க்கவும் தமிழ்நாட்டில் தனது குளிர்பான சந்தைக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் காளிமார்க் நிறுவனத்தின் பெருமளவிலான பங்குகளை வாங்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் மற்றும் காளிமார்க் இடையே இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
காளிமார்க் 1916-ம் ஆண்டு விருதுநகரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் ஆகும். பவன்டோ இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற குளிர்பானமாகும். காளிமார்க் நிறுவனத்தின் பெரும் பங்குகளை வாங்குவதன் மூலம் காளிமார்க்குக்கு சொந்தமான 8 ஆலைகளில் கேம்ப பிராண்ட் குளிர்பானத்தைத் தயாரிக்கவும் அதேசமயம் காளிமார்க் நிறுவனத்தின் பவன்டோ, காளிமார்க் சோடா உள்ளிட்ட தயாரிப்புகளை தொடர்ந்து விற்பனை செய்யவும் ரிலையன்ஸ் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT