Published : 09 Apr 2023 12:32 AM
Last Updated : 09 Apr 2023 12:32 AM

போர்ப்ஸ் 2023 உலக பணக்காரர்கள் பட்டியல் - 99 வயதில் உலக பில்லியனர் ஆன இந்தியர்

டெல்லி: ஃபோர்ப்ஸ் 2023-ன் உலக பணக்கார பில்லியனர்கள் பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

பிரான்ஸை தலைமையாக கொண்ட LVMH நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட் 211 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் முதல் பணக்காரராக இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 180 பில்லியன் டாலர் சொத்துகளுடன் எலான் மஸ்க் 2ம் இடம்பிடித்துள்ளார். முதல் பத்து இடங்களுக்குள் இந்திய சார்பில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மட்டுமே இடம்பிடித்துளளார். அவருக்கு 9ம் இடம் கிடைத்துள்ளது. கெளதம் அதானி, கடந்த ஆண்டு 3ம் இடம்பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 24வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

எனினும், இப்பட்டியலில் இந்தியர்கள் அதிகளவில் இடம்பிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 169 இந்தியர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 166 ஆக இருந்தது. குறிப்பிடத்தக்க விதத்தில் இதில், 99 வயதான கேஷூப் மஹிந்திராவும் இடம் பிடித்துள்ளார். இது தொழில்துறையினர் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

இதே பட்டியலில் இடம்பெற்றுள்ள மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் மாமாதான் இந்த கேஷூப் மஹிந்திரா. சிம்லாவில் அக்டோபர் 9, 1923 இல் பிறந்த கேஷுப் மஹிந்திரா, இந்த ஆண்டு இறுதியில் 100 வயதை எட்டுகிறார். இவரின் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்கள்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற கேஷூப், தனது தந்தை மற்றும் மாமாவால் நிறுவப்பட்ட மஹிந்திரா குழுமத்தில் 1947ல் இணைந்தார். 1963ல் அக்குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற இவர், கடந்த 2012 வரை அப்பொறுப்பில் இருந்தார். 2012ல் விலகிய பின் அப்பொறுப்பை மருமகன் ஆனந்த் மஹிந்திராவிடம் வழங்கினார்.

ஐந்து தலைமுறையாக மஹிந்திரா குழும தலைவராக இருந்தபோது உலக பணக்காரர் பட்டியலில் இடம்பிடிக்காத கேஷுப், தனது 99வது வயதில் இடம்பிடித்துள்ளது சாதனையாக மாறியுள்ளது. ஃபோர்ப்ஸ் 2023 பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் மிக அதிக வயதான பில்லியனர் என்ற சாதனையே அது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x