Published : 07 Apr 2023 07:57 AM
Last Updated : 07 Apr 2023 07:57 AM
மும்பை: பணவீக்கம் உச்சம் தொட்டிருந்த நிலையில் அதைக் கட்டுப்படுத்த 2022-23 நிதி ஆண்டில் மட்டும் ரிசர்வ் வங்கி 2.5 சதவீதம் வட்டி விகிதத்தை உயர்த்தியது. தற்போதும் பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்பைவிடவும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் இம்முறையும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை (ரெப்போ) உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளவில்லை.
2023-24 நிதி ஆண்டுக்கான முதல் நிதிக் கொள்கை குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. அப்போது ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் “இந்தமுறை ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. ரெப்போ விகிதம் முந்தைய அளவான 6.50 சதவீதத்திலேயே தொடரும். தற்போதைய சூழலைக் கணக்கில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
மேலும், நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் பணவீக்கம் 5.2 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் பணவீக்கம் 6.52 சதவீதமாகவும், பிப்ரவரியில் 6.44 சதவீதமாகவும் இருந்தது.
பணவீக்கமும் ரெப்போ விகிதமும்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், உணவு பொருட்களின் விலை உயர்ந்த நிலையில் பணவீக்கம் தீவிரமடைந்தது. உலக அளவில் மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெப்போ விகிதத்தை உயர்த்தத் தொடங்கின.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் தொடர்ச்சியாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. இதனால், அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்த வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாகின. ரெப்போ விகித உயர்வால் கடன் பத்திரங்களின் மதிப்பு குறைந்தது. கடன் பத்திரங்களில் பெரும் தொகையை முதலீடு செய்திருந்த எஸ்விபி வங்கி இழப்பைச் சந்தித்து திவால் நிலைக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து மற்றொரு அமெரிக்க வங்கியான சிக்னேச்சரும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது. இந்நிகழ்வு சர்வதேச அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், தற்போது இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தாமல் முந்தைய அளவிலேயே தொடரச் செய்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
தவணை உயராது
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டியானது ரெப்போ என்று அழைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வங்கிகள் மக்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதனால், வீடு, வாகன கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகை அதிகரிக்கும். கடந்த நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக ரெப்போ விகிதத்தை உயர்த்திய நிலையில் மாதத் தவணை செலுத்தும் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகித உயர்வை மேற்கொள்ளாதது மக்களுக்கு சற்று ஆறுதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT