Published : 06 Apr 2023 06:14 AM
Last Updated : 06 Apr 2023 06:14 AM

செயற்கை நூல் இழை திணிப்பால் தமிழகத்தில் பருத்தி ஆடை உற்பத்தி சரிவு : மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

திருப்பூர்: செயற்கை நூல் இழை திணிப்பால் தமிழகத்தில் பருத்தி ஆடை உற்பத்தி சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் அடையாளம் பருத்தி. சுதந்திர போராட்டத்தில் பருத்தி ஆடைகள்தான் இந்தியாவின் தேசிய ஆடையாக இருந்தன. இன்றைக்கும் இந்தியாவில் பருத்தி விவசாயமும் அதனை சார்ந்த குடும்பங்களும் கோடிக்கணக்கில் உள்ளன.

பஞ்சு, நூலை தொடர்ந்து அது பனியனாக மாறுவதுதான் திருப்பூரில் இதுவரை இருந்து வரும் பருத்தியின் அடையாளம். தற்போது செயற்கை இழைக்கு (பாலியஸ்டர்) பலர் மாறத் தொடங்கியிருந்தாலும், பருத்திதான் திருப்பூர் தொழிலின் நிரந்தர அடையாளம் என்ற குரல்களும் கேட்கத் தொடங்கி உள்ளன.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் (டீமா) முத்துரத்தினம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பருத்தி விவசாயத்தையும், பஞ்சு மற்றும் நூல் தொழிலையும் நம்பி ஏராளமான குடும்பங்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல கோடி பேர் வாழ்ந்து வருகின்றனர்.

பருத்தி உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அண்டை நாடான சீனா, இந்தியாவின் சூரத் மற்றும் லூதியானா ஆகிய பகுதிகளில் இருந்து செயற்கை நூல் இழை வரவழைக்கப்பட்டு, இந்த தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இன்றைக்கு இதன் எதிரொலியாக கரூர், ஈரோடு மாவட்டங்களில் செயற்கை இழை உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அதாவது துண்டு, பெட்ஷீட் உள்ளிட்டவற்றை செயற்கை இழையால் தயாரிக்க தொடங்கியுள்ளனர்.

திருப்பூரை சுற்றி பருத்தியை சுத்தம் செய்யும் ஜின்னிங் பேக்டரியும், பருத்தியை நூலாக்கும் நூற்பாலைகளும் அதிக அளவில் உள்ளன. செயற்கை நூல் இழை திணிப்பால், தமிழகத்தின் பருத்தி ஆடை உற்பத்தி சரிவு ஏற்படும் அபாயமுள்ளது. செயற்கை இழை என்றால் சாயமிடுதல் தொடங்கி அனைத்திலும் புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே பருத்தியை நம்பி, முதலீடு செய்து பல்வேறு இயந்திரங்களை வாங்கி வைத்திருப்பவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். செயற்கை இழையை மத்திய அரசு திணிக்கிறது என்றால், கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய மாநில அரசும் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகளால் பருத்தி ஆடை உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் கூறியதாவது: பருத்தி இழை ஆடைகளுக்கான சந்தை எப்போதும் உண்டு. புதுப்புது வடிவாக்கம் மற்றும் இளைஞர்களை கவரும் வெளிநாட்டு ஆடைகள், உள்ளாடைகளை நாம் சந்தைப்படுத்த வேண்டும். திருப்பூரில் உற்பத்தி சுணக்கம் ஏற்பட்டுள்ளதுபோல தோற்றம் உள்ளது.

இதற்கு நம் நாட்டில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மிகப்பெரும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை பெருக்கியுள்ளதே காரணம்.

அவர்களுடன் நமது சிறு, குறு நிறுவனங்கள் போட்டியிட இயலாத நிலை உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து, தமிழ்நாட்டுக்கு வந்து பின்னலாடைகளை சந்தைப்படுத்துவதற்கு இணையாக, இங்கிருப்பவர்கள் பிற மாநிலங்களுக்கு சென்று, நமது பின்னலாடைகளை சந்தைப்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்ட வேண்டும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x