Published : 05 Apr 2023 10:06 AM
Last Updated : 05 Apr 2023 10:06 AM
சென்னை: தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை முதன்முறையாக சவரன் ரூ.45 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
உலகளவில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், மத்திய வங்கிகளால் உயர்த்தப்படும் வட்டி விகிதங்கள் எனப் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதால் அதன் மீதான முதலீடுகள் உயர தங்கம் விலையும் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில் தங்கம் விலை இன்று (ஏப்ரல் 5) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று முதன்முறையாக சவரன் ரூ.45 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இன்றைய நிலவரப்பட்டி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,690-க்கும், சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,520-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,336-க்கு விற்பனையாகிறது. இதேபோல்,வெள்ளி ஒரு கிராம் ரூ.80.70-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.80,700-க்கும் விற்பனையாகிறது.
வட்டி விகிதம் உயர்கிறதா? 2023 ஆம் நிதியாண்டிற்கான இருமாத நாணயக் கொள்கை கூட்டத்தை ரிசர்வ் வங்கி நடத்தி வருகிறது. இக்கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதங்கள் உயர்த்துவது அல்லது குறைப்பது குறித்து ஆர்பிஐ அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ரிசர்வ் வங்கி கால் சதவீதம் வரை வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் ஆபரணத் தங்கத்தின் விலை முதன்முறையாக சவரன் ரூ.45 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT