Last Updated : 02 Apr, 2023 04:07 AM

 

Published : 02 Apr 2023 04:07 AM
Last Updated : 02 Apr 2023 04:07 AM

விவசாயத்தை பிரதானமாக கொண்ட சூளகிரியில் நாற்று பண்ணை அமைக்க வலியுறுத்தல்: விரைவில் நடவடிக்கை என அதிகாரிகள் தகவல்

சூளகிரி தனியார் பண்ணையில் நாற்றுகளைப் பதியம் போடும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்.

கிருஷ்ணகிரி: விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட சூளகிரியில் தோட்டக் கலைத் துறை சார்பில் நாற்றுப் பண்ணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். சூளகிரி வட்டத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 600-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

காய்கறி, மலர் சாகுபடி: இக்கிராமங்களில் விவசாயிகள் காய்கறி மற்றும் மலர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் விளை பொருட்கள் சூளகிரி, ஓசூர் சந்தைகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் காய்கறி மற்றும் மலர் நாற்றுகளைத் தனியார் பண்ணைகளிலிருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

சில நேரங்களில் தரம் இல்லாத நாற்றுகள் நடவு செய்யும்போது, விவசாயிகள் வருவாய் இழப்பைச் சந்திக்கும் நிலையுள்ளது. இந்நிலையில், சூளகிரியை மையமாகக் கொண்டு தோட்டக்கலைத் துறை சார்பில் அரசு நாற்றுப் பண்ணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயன் அளிக்காத மானியம்: இது தொடர்பாக சூளகிரியைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன் கூறியதாவது: சூளகிரி வட்டத்தில் உள்ள கிராமங்களில் அதிகளவில் தக்காளி, கத்தரிக்காய், முட்டைகோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட காய் கறிகளும், செண்டுமல்லி, குண்டு மல்லி, ரோஜா மலர் வகைகளும், ஒட்டு மா, புளி, சப்போட்டா உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகிறோம்.

இதற்கான நாற்றுகளை தனியார் பண்ணைகளில் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதேநேரம் அரசு சார்பில் தோட்டக் கலைத்துறை பண்ணையில் விவசாயிகளுக்கு மானியத்திலும், இலவசமாக நாற்றுகள், வழங்கப்படுகின்றன. இதை சூளகிரி, உத்தனப்பள்ளி, பேரிகை பகுதி விவசாயிகள் பெறுவதற்கு, தளி, ஜூனூர், திம்மாபுரத்தில் உள்ள அரசுப் பண்ணைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தரமான நாற்றுகள்: நீண்ட தொலைவில் உள்ள பண்ணையில் இருந்து நாற்றுகளை வாகனத்தில் ஏற்றி வர போக்குவரத்து செலவுடன், கால விரயமும் ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் பலர் அரசின் திட்டங்களில் பயன்பெற முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, சூளகிரியை மையமாகக் கொண்டு தோட்டக்கலைத் துறை மூலம் அரசு பண்ணை அமைத்தால், சூளகிரி, ஓசூர் பகுதி விவசாயிகள் பயன் பெறுவதோடு, தரமான நாற்றுகளும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினர்.

பண்ணை அமைக்க நடவடிக்கை: இது தொடர்பாக தோட்டக் கலைத் துறை அலுவலர்கள் கூறும்போது, “சூளகிரியில் அரசு பண்ணை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x