Published : 01 Apr 2023 04:00 AM
Last Updated : 01 Apr 2023 04:00 AM

120 `வந்தே பாரத்' ரயில்களை தயாரிக்க ரஷ்ய நிறுவனத்துடன் இந்திய ரயில்வே ஒப்பந்தம் - ஒரு ரயில் தயாரிப்பு செலவு ரூ.120 கோடி

புதுடெல்லி

இந்திய ரயில்வேக்கு 120 `வந்தே பாரத்' ரயில்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு ரயில் தயாரிக்க ரூ.120 கோடி வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ‘வந்தே பாரத்’ என்ற பெயரில் அதிநவீன வசதிகள் கொண்ட ரயில்களை இயக்க, இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது.

அந்த வகையில், டெல்லி, வாரணாசி இடையே கடந்த 2019-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. டெல்லி-போபால் இடையே 11-வது வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது. அடுத்தபடியாக, சென்னை-கோவை இடையே 12-வது வந்தே பாரத் ரயில் சேவையை, வரும் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது, சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இந்த ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.

2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 44 இரண்டாம் தலைமுறை வந்தே பாரத் ரயில்களைத் தயாரிப்பதற்கான ஆர்டர் ஐசிஎஃப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதுதவிர, உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் உள்ள எம்சிஎஃப், ஹரியாணாவின் சோனிபட் நகரில் உள்ள ஆர்சிஎன்கே மற்றும் மகாராஷ்டிராவின் லத்தூரில் உள்ள எம்ஆர்சிஎஃப் ஆகிய தொழிற்சாலைகளிலும் வந்தே பாரத் ரயில் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், 120 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ரஷ்யாவின் ஜேஎஸ்சி மெட்ரோவேகன்மஷ்-மிதிஸ்சி (டிஎம்எச்) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனமான ஆர்விஎன்எல் உடன் கூட்டு வைத்துள்ள டிஎம்எச் நிறுவனம், மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் உள்ள தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்கும். தேவைப்பட்டால் ரயில்களின் எண்ணிக்கை 200-ஆக உயர்த்தப்படலாம் என ரஷ்ய நிறுவனத்திடம் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

முன்னதாக, வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு தொடர்பாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில், குறைந்தபட்சமாக ஒரு ரயிலுக்கு ரூ.120 கோடி எனக் குறிப்பிட்டிருந்ததால் டிஎம்எச்-ஆர்விஎன்எல் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, திட்டகார்-பெல் கூட்டு நிறுவனம் ஒரு ரயிலுக்கான விலையை ரூ.140 கோடி எனக் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், ரூ.120 கோடிக்கு தயாரித்துத் தர தயாராக இருந்தால், 80 ரயில்களைத் தயாரிக்கும் ஒப்பந்தம் திட்டகார்-பெல் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதை அந்த நிறுவனம். ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இது தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலிலும் முதல் வகுப்பு ஏசி பெட்டி 1, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 3, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 11 இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x