Published : 02 Sep 2017 09:52 AM
Last Updated : 02 Sep 2017 09:52 AM
உ
ங்களிடம் ஒரு சில கேள்விகள் கேட்க உத்தேசம். ஈசியான கேள்விகள்தான். வாழ்க்கையில் சாதாரணமாய் நாம் சந்திக்கும் விஷயங்கள் பற்றியவை. விடைகள் அதைவிட ஈசி. ஆனால் அக்கேள்விகளை நீங்கள் செய்யும் வியாபாரத்தோடு சேர்த்து பார்க்கும் போது தான் பிரச்சினை தெரியும். தெரியவேண்டும். தெரியவில்லை என்றால் வியாபாரமே கேள்விக்குறியாகிவிடும்.
கேள்வி நம்பர் ஒன். இதுவரை போகாத ஊருக்கு போய் சேர்ந்திருக்கிறீர்கள். போக வேண்டிய விலாசம் தெரியும். ஆனால் வழி தெரியாது. பஸ்ஸிலிருந்து இறங்கி ‘பே’ என்று நிற்கிறீர்கள். போகவேண்டிய விலாசத்தை அங்கு நிற்கும் போலீஸ்காரரிடம் கேட்பீர்களா? இல்லை, உங்களைப் போல் விலாசம் தெரியாமல் உங்கள் அருகில் அமர்ந்து பயணம் செய்தவரிடம் கேட்பீர்களா?
இதென்ன கேனத்தனமான கேள்வி. என்ன தான் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்தாலும் கூட வந்தவருக்கும் வழி தெரியாது எனில் போய் இறங்கிய ஊர்க்காரர், அதுவும் போலீஸ்காரர் என்றால் அவரிடம் தான் வழி கேட்பேன். இதெல்லாம் ஒரு கேள்வி. வேலை மெனெக்கெட்டு இதற்கு பதில் சொல்லும் என்னை ஜோட்டால அடிக்கணும் என்று தோன்றுகிறதா? பொறுங்கள். அவசியம் அடித்துக்கொள்ள அவகாசம் அளிக்கிறேன்.
யாரிடம் கேட்கலாம்..
வாழ்க்கையில் உங்களை போல் விலாசம் தெரியாதவரிடம் வழி கேட்கக்கூடாது என்று தெரிகிறபோது வியாபாரத்தில் உங்களை போல் வழி தெரியாமல் நிற்பவரிடம் ஆலோசனை கேட்பது மட்டும் எந்த விதத்தில் அறிவார்ந்த செயல்?
தொழிலில் பெரிய அனுபவம் இல்லாத சிறிய தொழிலதிபர்கள் பலர் தங்களைப் போல் வியாபாரம் செய்யும் மற்ற தொழிலதிபர்களோடு சங்கம் அமைத்தோ அல்லது கிளப்பிலோ சந்தித்து பழகுவதைப் பார்த்திருக்கிறேன். பாராட்டப்படவேண்டியது தான். ஆனால் தங்களைப் போல் மற்றவர்களுக்கும் அனுபவம் குறைவு என்று தெரியும். தங்களை வழி நடத்திச் செல்லும் வகையிலான திறன் அதிகமில்லாதவர்கள் என்றும் தெரியும். தங்களைப் போலவே அவர்களும் தொழிலில் அறிவுரை எதிர்பார்ப்பவர்கள் என்றும் தெரியும். பிறகு எதற்கு அவர்களிடம் தங்கள் வியாபார கேள்விக்கு பதிலையும் செல்லவேண்டிய இடத்திற்கு வழியையும் தேடுகிறார்கள்?
இல்லாதவருக்கு எப்படி இன்னொரு இல்லாதவர் தர முடியும்? எதைத் தர முடியும்? அப்படியே தந்தாலும் அது எப்படி வழி காட்டும் உதவியாக இருக்க முடியும்? தெரியாத கேள்வியை கேட்கும் போது எதற்கும் இருக்கட்டும் என்றுதான் அடுத்தவர் பதில் கூறப் போகிறார். பதில் சரியாய் அமைந்து கேட்டவருக்கு ஒர்க் அவுட் ஆனால் நாமும் பிறகு அதையே பயன்படுத்துவோம் என்பது போல.
புதிய பிராண்ட் ஒன்றை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அதன் விற்பனை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. திறமையுடன் வடிவமைத்து, தரத்துடன் தயாரித்திருக்கும் பிராண்ட் ஏன் விற்கமாட்டேன் என்று புரியவில்லை. உங்கள் பிராண்டை போல விற்காமல் தவிக்கும் இன்னொரு தொழிலதிபரிடமா அறிவுரை கேட்பீர்கள்? அவரும் தன் பிராண்ட் விற்பனையை எப்படி கூட்டுவது என்று குழம்பிக் கிடக்கிறார். விலையை குறைத்தால் சரியாய் இருக்குமா என்ற சிந்தனையில் இருக்கிறார். அவருக்கே தெரியாத பதிலை அவசரப்படுத்தி கேட்டால் ‘குறைத்துப் பாருங்களேன்’ என்று தான் கூறுவார்.
பிராண்ட் விற்பனையை கூட்ட விலையை குறைத்தால் சரியாக இருக்குமா, வேறு ஏதாவது புதிய பிரச்சினை முளைக்குமா என்று யோசித்துக் கொண்டிருந்தவரிடம் நீங்கள் போய் வசமாய் சிக்கினீர்கள். இவரை விலை குறைக்கச் சொல்வோம். இவர் பிராண்டுக்கு அது பயன்பட்டால் நாமும் அதையே செய்வோம் என்று உங்களுக்கு பதிலளிக்கிறார். நீங்களும் `ஆஹா பெற்றேன் புத்தியை’ என்று அவரது அரைவேக்காட்டு அறிவையே அறிவுரையாய் பாவித்து அதை சிரமேற்கொண்டு செயல்படுத்துகிறீர்கள். உங்கள் பிராண்ட் விற்பனை இன்னமும் குறைகிறது. சாமி கும்பிட்டால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் குல தெய்வத்திற்கு கிடா வெட்ட கோயிலுக்கு கிளம்புகிறீர்கள்.
பிராண்ட் பொசிஷனிங்
உங்கள் பிராண்ட் பொசிஷனிங்கில் தவறு இருக்கலாம். பிராண்ட் பற்றிய விழிப்புணர்வு வாடிக்கையாளர்களுக்கு குறைவாய் இருக்கலாம். பிராண்ட் பெயர் பிராண்டின் தன்மைகளை குறிக்காமல் இருக்கலாம். உங்கள் பேக்கிங்கில் தவறு நடந்திருக்கலாம். கடையில் உங்கள் பிராண்ட் கண்ணில் தெரியும்படி இல்லாமல் இருக்கலாம். இத்தனை ‘கலாம்’ இருக்கும் போது ‘அப்துல் கலாம்’ போல தொழிலில் ஆற்றலும் அனுபவமும் உள்ள ஒரு ஆலோசகரிடம் அறிவுரை கேட்பதை விட்டுவிட்டு அடுத்தவர் அருகில் இருக்கிறார் என்று அவரிடம் கேட்டால் அவர் அப்படித் தான் பதில் கூறுவார். ஊர் போலீஸ்காரரிடம் வழி கேட்காமல் ஊருக்கு புதியதாய் வந்தவரிடம் வழி கேட்பது கேனத்தனம் என்றால் இது மட்டும் என்னவாம்!
மற்ற தொழிலதிபர்களோடு நட்பு பாராட்டாதீர்கள் என்று சொல்லவில்லை. அறிவான, அனுபவம் வாய்ந்தவர்களிடம் அறிவுரை கேட்பதே புத்திசாலித்தனம் என்கிறேன். தெரியாதவரிடம் வழி கேட்டுத் திண்டாடாதீர்கள் என்று சொல்கிறேன்.
கேள்வி நம்பர் இரண்டு . வயிறு உப்புசமாக இருக்கிறது. எதிரிலுள்ள டேபிள் சேரையே இழுக்கும் அளவிற்கு ஏப்பம் விடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து டாக்டரிடம் செல்கிறீர்கள். அவரும் ரூமை சாத்தி, உங்கள் சட்டையை கழட்டி, பனியனை தூக்கி, பாண்ட்டை இறக்கி முடிந்தவரை மானபங்கப்படுத்தி வயிற்றை துழாவி கடைசியில் ‘லிப்ராக்ஸ் எழுதி தரேன், பத்து நாள் காலையில போட்டுட்டு வாங்க. சரியாயிடும்’ என்கிறார். எழுதித் தந்த மருந்து சீட்டை ஒழுங்கு மரியாதையாக வாங்கிக்கொண்டு சொன்ன மாத்திரையை போடுவீர்களா இல்லை டாக்டரிடமே ‘லிப்ராக்ஸ விட நோவேக்சின் பெட்டர் இல்லை? இல்ல டாம்ஸ்டால் போடலாமா? எதுக்கும் பெண்டில் ட்ரை பண்ணட்டுமா’ என்று கேட்பீர்களா? டாக்டர் கையிலிருக்கும் ஸ்டெதஸ்கோப்பை உங்கள் முகத்தில் விசிறி ‘வீட்டிலிலேயே உக்காந்து வைத்தியம் பாத்துக்கவேண்டியது தானே, ஏன் இங்க வந்து என் எழவ எடுக்கறீங்க’ என்று கத்துவாரா மாட்டாரா.
வியாபாரத்தில் ஏன் அதே தப்பை செய்கிறீர்கள்? உங்கள் பிராண்டிற்கு விளம்பரம் டிசைன் செய்ய விளம்பர ஏஜென்ஸியை நாடுகிறீர்கள். அவர்கள் கொண்டு வரும் டிசைனில் ‘பச்சை கலர் பேக்ரவுண்ட் இருந்தா நல்லா இருக்குமே. இந்த இடத்தில ஒரு பொண்ணு படம் இருக்கலாமே. இங்கன மஞ்சள் கலர் வைங்க. எதுக்கும் ரெண்டு மூனு கலர் ஆப்ஷன் போட்டு காமிங்க. தலைப்பை இப்படி மாத்தி எழுதினா சூப்பரா இருக்காது’ என்று ஏன் கேட்கிறீர்கள்? டிசைனில் வல்லுனர் நீங்களா, அவர்களா? உங்களுக்குத்தான் டிசைன் வரவில்லை, அதை ஏன் வற்புறுத்தி வரவழைக்கிறீர்கள்? ‘நீங்களே டிசைன் பண்ணிக்குங்க’ என்று விளம்பர ஏஜென்சி டிசைனை முகத்தில் விசிறி எறிந்தால் முகத்தை எங்கு வைத்துக்கொள்வீர்கள்?
உங்கள் பிராண்ட் பற்றி உங்களுக்குத் தெரியும். அதன் தன்மைகள், அதன் பயன்களை விளம்பர டிசைன் தெளிவாக கூறுகிறதா, பார்ப்பவருக்கு எளிதில் பிடித்து, கூற வந்த விஷயம் புரியும்படி இருக்கிறதா என்று பார்க்கும் வேலை மட்டும் நீங்கள் பார்த்தால் போறாதா? உங்கள் பிராண்ட் சார்ந்த பொருள் வகைக்கு உகந்த கலர் எது, சொல்லவேண்டிய விஷயத்தை புரியும்படி விளக்கும் தலைப்பு எது போன்றவை டிசைன் செய்வதில் திறனும் அனுபவமும் உள்ள விளம்பர ஏஜென்சி கூறுவதை கேட்பீர்களா, இல்லை அவைகளைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத நீங்கள் அறிவுறுத்துவீர்களா.
எப்படி சரியான டாக்டரை தேர்ந்தெடுத்து அவர் உதவியை, அவர் அறிவுரையை நாடுகிறீர்களோ அதே போல் தேர்ந்த விஷய ஞானிகளை தேடிப் பிடியுங்கள். அவர்கள் கூறுவதை செவி கொடுத்து கேளுங்கள். அவர்களிடமே டாம்ஸ்டால் பெட்டரா, லிப்ராக்ஸ் பெட்டரா என்று திருப்பிக் கேட்டால் ஆந்த்ராக்ஸ் தரேன், போட்டுட்டு போய் தொலை என்றுதான் எரிந்து விழுவார்கள்!
மூன்றாவது கேள்வி... இல்லை வேண்டாம். இன்று இரண்டு போதும். இதற்கே உங்களுக்கு கோபம் வந்திருக்கும். அடுத்த கேள்வி கேட்டால் அடிக்கவே வருவீர்கள். அதற்காக உங்களை விடப் போவதில்லை. மற்ற கேள்விகளை மற்றொரு சமயம் கேட்பேன்.
satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT