Published : 24 Mar 2023 04:59 AM
Last Updated : 24 Mar 2023 04:59 AM
புதுடெல்லி: கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று திருப்பிசெலுத்தாமல் 2016-ம் ஆண்டு லண்டன் தப்பிச் சென்றார். இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு லண்டன் காவல் துறை அவரை கைது செய்தது. ஆனால், அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இவ்வழக்குத் தொடர்பாக சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையை தற்போது தாக்கல் செய்துள்ளது.
அதில் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் பொது மேலாளர் புத்ததேவ் தாஸ்குப்தா, விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு ரூ.150 கோடி கடன் வழங்குவதற்காக ஆவணங்களில் முறைகேடு செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
விஜய் மல்லையா ஐடிபிஐ வங்கியில் ரூ.900 கோடி கடன் பெற்றுள்ளார். இந்தக் கடனை விஜய் மல்லையா தன்னுடைய சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளார். மேலும், அதை அவர் திருப்பிச் செலுத்தவும் இல்லை. இந்தப் பணம் கிங் பிஷர் நிறுவனத்திலிருந்து அவரது போர்ஸ் இந்தியா பார்முலா 1 டீம் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டிருப்பதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது. விஜய் மல்லையாவுக்கு கடன் கிடைக்கச் செய்ய ஐடிபிஐ வங்கி பொது மேலாளர் புத்ததேவ் தாஸ்குப்தா ஆவணங்களில் முறைகேடு செய்துள்ளார். வங்கிகளில் பணம் மோசடி செய்துவிட்டு அந்தப் பணத்தைக் கொண்டு லண்டனில் ரூ.80 கோடிமதிப்பிலும் பிரான்ஸில் ரூ.250 கோடி மதிப்பிலும் விஜய் மல்லையா சொத்துகள் வாங்கியுள்ளார்.
அதேபோல், விஜய் மல்லையா 2014-15 வாக்கில் சுவிஸ் வங்கியில் கணக்கு திறந்துள்ளார். அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சுவிஸ் வங்கியில் கணக்குத் தொடங்குவதற்கு அந்த விவரத்தையும் குறிப்பிட்டுள்ளார் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT