Published : 24 Mar 2023 05:10 AM
Last Updated : 24 Mar 2023 05:10 AM
கலிபோர்னியா: பணிநீக்க நடவடிக்கைகளில் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பணியாளர்கள் 1,400 பேர் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.
ஆல்பபெட் பணியாளர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கூகுள் நிறுவனத்தில் 12,000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்த ஊழியர்களை மதிப்பாகவும், சிறந்த முறையிலும் நடத்த வேண்டும். நிறுவனத்துக்கு புதிய பணியாளர்களை தேர்வு செய்வதை நிறுத்த வேண்டும். காலியான பணியிடங்களை நிரப்பும்போது பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
அதேசமயம், கட்டாய பணிநீக்கத்துக்கு முன்னதாக தாமாக முன்வந்து பணிவிலக வருவோருக்கு முன்னுரிமை தந்து சலுகைகளை வழங்கிட வேண்டும்.
தீவிர மோதல் நிலவும் அல்லது உக்ரைன் போன்ற மனிதாபிமான நெருக்கடி மிகுந்த நாடுகளில்உள்ள பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். மேலும், விசாவுடன் இணைக்கப்பட்ட தங்குமிடத்துடன் கூடிய வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்க நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஆல்பபெட் தனது பணியாளர்களை குறைக்கும் முடிவின் தாக்கம் உலகெங்கிலும் எதிரொலிக்கும். தொழிலாளர்களின் குரலுக்குபோதுமான மதிப்பு அளிக்கப்படவில்லை. தனியாக இருப்பதை விட ஒன்றாக இருப்பதே பலம் என்பதை அறிந்துள்ளோம். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு பிறகான மந்தநிலையை கருத்தில் கொண்டு செலவினங்களை குறைக்க முதலீட்டாளர்கள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் கொடுத்த அழுத்தத்தையடுத்து 6 சதவீத பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் ஆல்பபெட் நிறுவனம் அறிவித்தது.
இந்த சூழ்நிலையில், அந்நிறுவனத்தின் பணியாளர்கள் பணி நீக்கநடவடிக்கைகளில் உரிய மரியாதையை அளிக்க வேண்டும் எனகோரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
19,000 பேரை பணிநீக்கம் செய்கிறது அசெஞ்சர்: தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள அசெஞ்சர் நிறுவனம் 19,000 பேரை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த ஊழியர்களில் இது 2.5 சதவீதமாகும். செலவுகளை குறைக்கவும், செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் இந்த நடவடிக்கை ேற்கொள்ளப்படுவதாக அசெஞ்சர் தெரிவித்துள்ளது.
மேலும், வருவாய் மற்றும் லாபம் ஆகியவற்றுக்கான மதிப்பீடுகளையும் அந்நிறுவனம் குறைத்துள்ளது. நடப்பு காலாண்டில் வருவாய் 16.7 பில்லியன் டாலர் (ரூ.1.36 லட்சம் கோடி) என்ற அளவிலேயே இருக்கும் என்று அசெஞ்சர் தெரிவித்துள்ளது.
மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஏற்கெனவே அந்நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT