Published : 20 Mar 2023 03:17 PM
Last Updated : 20 Mar 2023 03:17 PM
சென்னை: தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியம் அளிப்பதற்காக வரும் நிதி ஆண்டில் ரூ.144 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு: அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்காக, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்வது இன்றியமையாததாகும். இத்தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து பதிவு செய்வதற்கான ஒரு சிறப்பு முயற்சியை அரசு மேற்கொள்ளும். பெரிய தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தொழில் நிறுவனங்களையும் இணைத்து, ஒருங்கிணைந்த தரவுதளம் ஒன்றை ஏற்படுத்த இந்த முயற்சி வழிகோலும். இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படும்.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழில் வளர்காப்பகங்கள் (Business incubators) உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. காலநிலைத் தொழில்நுட்பம், ஊரகத் தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், கடல்சார் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற விழையும் தொழில் வளர்காப்பகங்களை ஆதரிக்கும் நோக்கில், உயர்நுட்ப மையங்களை அமைக்க புத்தொழில் தமிழ்நாடு இயக்கம் உதவும். தொழில் வளர்காப்பகங்கள் நிதி திரட்டிட உதவுவதுடன், 40 சதவீத மானியமும் வழங்கப்படும். மாநிலத்தில் தொழில் வளர்காப்பகங்களின் கட்டமைப்பை வலுப்படுத்த புத்தொழில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்படும்.
இவ்வாண்டு, முதல் - தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தில் (NEEDS), ரூ.144 கோடி அளவிலான மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டச் செயல்பாட்டில் இது ஒரு புதிய மைல்கல். குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு, உரிய நேரத்தில் பணம் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய ‘மின்னணு வர்த்தக வரவு தள்ளுபடி’ (TReDS) தளத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இணைவதைக் கட்டாயமாக்கியுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடாகும். இம்மதிப்பீடுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ. 1,509 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT