Published : 20 Mar 2023 03:00 PM
Last Updated : 20 Mar 2023 03:00 PM

சேலத்தில் ரூ.880 கோடி, விருதுநகரில் ரூ.1,800 கோடியில் ஜவுளிப் பூங்காக்கள்: தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் அறிவிப்பு

சென்னை: சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டிலும், விருதுநகரில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டிலும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது பட்ஜெட் உரையில் வெளியிட்ட தகவல்கள்:

  • கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் நலனில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகின்றது. 76,356 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 200-இல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 1.64 இலட்சம் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 750 இல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மேற்கு மண்டலத்தில் புதிய ஜவுளிப் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என அண்மையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதனடிப்படையில் சேலத்தில் சுமார் ரூ.880 கோடி செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்றிய மாநில அரசுகளின் நிதியுதவியுடனும் தனியார் தொழில் முனைவோர் பங்களிப்புடனும் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
  • தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ 1,800 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு வசதிகளுடன் ஜவுளிப் பூங்கா அமைத்திட 1,052 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, ஒன்றிய அரசின் பங்களிப்புடன் இந்தப் பூங்காவின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த ஜவுளிப் பூங்காவின் மூலம் இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • கைத்தறிப் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ரூ. 20 கோடி செலவில் 10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் அரசால் நிறுவப்படும். மேலும், கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் மதிப்பு தொடரின் முழுமையான வளர்ச்சி, நவீன வடிவமைப்பு, துணிநூல் தயாரிப்பு இயந்திர உற்பத்தியை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் புதிய துணிநூல் கொள்கை ஒன்று வெளியிடப்படும். | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x