Last Updated : 15 Mar, 2023 12:09 PM

 

Published : 15 Mar 2023 12:09 PM
Last Updated : 15 Mar 2023 12:09 PM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாபெட் மூலம் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் துவக்கம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் கொப்பரை உற்பத்திக்காக தேங்காய்களை உலர வைத்துள்ளனர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசின் நாபெட் மூலம் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் துவக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகளவில் தேங்காய் விளைவிக்கப்படும் மாவட்டங்களில் ஒன்று கிருஷ்ணகிரி. தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளான காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், அரசம்பட்டி, பாரூர், மருதேரி மற்றும் போச்சம்பள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் மட்டும் சுமார் 20 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் தேங்காய் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னையில் ஈரியோ பைட் நோய் தாக்குதல் இருந்ததாலும், கடும் வறட்சியாலும் தேங்காய் விளைச்சல் பாதிப்படைந்தது. அப்போது தேங்காய் சிறுத்து காணப்பட்டதால், வெளி மார்கெட்டில் விலை குறைந்து காணப்பட்டது. போக்குவரத்து செலவு, உரிப்பு கூலி அதிகரித்த நிலையில், வியாபாரிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டு வந்தது. இதையடுத்து விவசாயிகளும், வியாபாரிகளும் தேங்காய்களை உடைத்து, காயவைத்து கொப்பரையாக வியாபாரம் செய்து வந்தனர்.

மத்திய அரசின் நாபெட்: கடந்த 2 ஆண்டுகளாக மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பெய்த கனமழையால் தென்னை மரங்கள் உயிர்பெற்று, தற்போது தேங்காய் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தேங்காயை அப்படியே விற்பனை செய்வதை விட, கொப்பரையாக விற்பனை செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதால், தமிழக அரசு கொப்பரை கொள்முதல் நிலையத்தை தொடங்கி, விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்திட வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய்கள் மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

6 மாத காலத்திற்கு: இது குறித்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், "மாவட்டத்திற்கு 200 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தேங்காய் பருப்பு விலை 1 கிலோ ரூ.73.19 முதல் ரூ.90.99 வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி, நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரவைக் கொப்பரை தேங்காய் விலை ஒரு கிலோ ரூ.108.60க்கும், பந்து கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.117.50க்கும் வருகிற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இத்திட்டம் கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் கிருஷ்ணகிரி அல்லது போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். தேங்காய் கொப்பரை விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x