Published : 11 Mar 2023 05:43 AM
Last Updated : 11 Mar 2023 05:43 AM
கலிபோர்னியா: அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான, சிலிகான் வேலி பேங்க் (எஸ்விபி) பங்கு மதிப்பு கடந்த வியாழக்கிழமை 60% வீழ்ச்சி அடைந்தது. இதைத் தொடர்ந்து மற்ற வங்கிகளின் மதிப்பும் கடும் சரிவை சந்தித்துள்ளன. ஜேபி மோர்கன், பேங்க் ஆஃப் அமெரிக்கா உட்பட முன்னணி வங்கிகளுக்கு ரூ.4.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட அளவைவிடவும் வைப்புத் தொகை குறைந்த நிலையில், அதை ஈடு செய்ய வங்கியின் கடன்பத்திரங்களை 1.8 பில்லியன் டாலர் (ரூ.14,760 கோடி) நஷ்டத்தில் எஸ்விபி விற்றது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று அதன் பங்கு மதிப்பு 60% சரிந்தது. இதையடுத்து ஜேபி மோர்கன், பேங்க் ஆஃப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ,சிட்டி குரூப் உள்ளிட்ட பெரிய வங்கிகளின் பங்கு மதிப்பு 52 பில்லியன் டாலர் (ரூ.4.25 லட்சம் கோடி) அளவில் சரிந்தது.
எஸ்விபி வங்கியில் வைப்புத் தொகை வைத்திருந்த நிறுவனங்கள், தற்போது தங்கள் வைப்புத் தொகையைத் திரும்பப் பெற்று வருகின்றன. இதனால் எஸ்விபி கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. அமெரிக்க நிதித் துறையில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்தியப் பங்குச் சந்தையிலும் நேற்று சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 671 புள்ளிகள் சரிந்து 59,135 ஆகவும் நிஃப்டி 176 புள்ளிகள் குறைந்து 17,412 ஆகவும் சரிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT