Published : 08 Sep 2017 09:12 AM
Last Updated : 08 Sep 2017 09:12 AM
இ
ந்த உலகில் எத்தனையோ மாற்றங்கள் உருவானதற்கான பல்வேறு காரணங்களில் மிக முக்கிய பங்கு கேள்விகளுக்கு உண்டு. வகுப்பறையிலிருந்து வாழ்க்கையின் கடைக்கோடிவரை எண்ணற்ற கேள்விகளுக்கான விடைகளைத்தேடி நாம் நிறையவே நேரத்தையும் ஆற்றலையும் செலவிடுகிறோம். உண்மை என்னவென்றால், நம்மால் எதிர்பார்க்கப்படும் சரியான பதில்களைப்போலவே, கேள்விகளும் அதிக முக்கியமானவையே. தாயைப்போல பிள்ளை, நூலைப் போல சேலை என்ற வரிசையில் கேள்வியைப்போல பதில் என்பதையும் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.
நம்மால் எழுப்பப்படும் ஒரு தவறான கேள்விக்கு நிச்சயமாக பதிலும் தவறானதாகவே கிடைக்கும். அதுவே, நம்முடைய சரியான கேள்விக்கான பதில் கண்டிப்பாக சரியானதாகவே இருக்கும். கேள்விகள் என்பவை நம்மிடையே ஆழமான புரிதலையும், அர்த்தமுள்ள தொடர்பினையும் ஏற்படுத்தக்கூடிய காரணிகளாக இருக்கின்றன என்றால் அது மிகையல்ல. நல்ல புரிதலை உருவாக்குவதற்கும், ஆர்வத்தை அதிகரிப்பதற்கும், முன்னேற்றத்திற்கான துவக்கத்திற்கும், உறவுகளின் வலுவூட்டலுக்கும் மற்றும் முக்கியமான விஷயங்களின் மீதான கவனத்திற்கும் தேவையான கேள்விகளையும், அவற்றின் மீதான புரிதலையும் பற்றி செல்கிறது “ஜேம்ஸ் ஈ ரயன்” அவர்களால் எழுதப்பட்ட “வெயிட், வாட்?” என்னும் இந்தப் புத்தகம்.
ஏன்?
எந்தெந்த கேள்விகளைக் கேட்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன், ஏன் கேள்விகேட்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா!. கேள்விகள் என்பவை திறவுகோல்கள் போன்றவை என்கிறார் ஆசிரியர். ஆம், சரியான நேரத்தில் கேட்கப்படும் ஒரு சரியான கேள்வியானது நமக்கு தெரியாத ஒரு விஷயத்திற்கான கதவைத் திறக்கும் அற்புத திறவுகோல். நம்மைப்பற்றியோ அல்லது மற்றவர்களைப்பற்றியோ சரியான புரிதலை ஏற்படுத்துவதற்கு நம்மிடமோ அல்லது மற்றவர்களிடமோ கேட்கப்படும் கேள்விகளே முழு முதற்காரணம் என்பதை அறிவோம். ஒருவருடைய மனதையும் ஆற்றலையும் அறிந்துகொள்ள, அவரிடமிருந்து பெறப்படும் பதில்கள் மட்டுமின்றி அவரால் கேட்கப்படும் கேள்விகளும் முக்கிய காரணிகளே.
என்ன?
பலதரப்பட்ட உரையாடல்களில் நம்மால் அன்றாடம் பலமுறை கேட்கப்படும் கேள்வி “என்ன?” என்பதே. ஆம், ஒரு விஷயத்தின் மீதான மிகச்சரியான மற்றும் தெளிவான புரிதலுக்கு அடித்தளமிடும் கேள்வி இது. குழந்தைகள் வளரத்தொடங்கும் பருவத்தில் இக்கேள்வியின் மூலமே அவர்களது எதிர்காலத்திற்கான விதை விதைக்கப்படுகிறது. என்ன? என்ற கேள்விக்கான பதிலே, ஆழமான புரிதலுக்கான விளக்கத்தை நமக்குத் தருகின்றது. கருத்துகள், திட்டங்கள், யோசனைகள், ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் என அனைத்திலும் இக்கேள்வியின் பங்களிப்பு அளப்பரியது. நம்முடைய புரிதலுக்கு மட்டுமின்றி, நமக்கான புரிதலை ஏற்படுத்தும் நபருக்கும் இக்கேள்வியின் பயன்பாடு பெரிதும் உதவுகின்றது.
அப்படியா?
ஒரு விஷயத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கக்கூடிய கேள்வி இது. மேலும், நமது சிந்தனைத் திறனை வளர்க்கும் காரணியாகவும் இது செயல்படுகின்றது. “என்னிடம் சிறப்பான திறமைகள் எதுவுமில்லை, உணர்வுபூர்வமான ஆர்வமே என்னிடம் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார் “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்”. அந்த ஆர்வமே அவரது சாதனைகளுக்கான அடித்தளம். ஒரு விஷயத்திற்கான அல்லது செயல்பாட்டிற்கான தொடக்கம் “அப்படியா?” என்ற கேள்வியிலிருந்தே உருவாகிறது என்பதே ஆசிரியரின் வாதமாக இருக்கின்றது. இந்தக் கேள்வி தவிர்க்கப்படும் சூழ்நிலைகளில், நமக்கான ஆச்சரியங்களையும் அதனால் கிடைக்கப்பெறும் மகிழ்ச்சிகளையும் நாம் இழந்துவிடுகிறோம் என்பதே உண்மை.
நமக்குள் தன்னம்பிக்கை விதைகளை விதைக்கும் அற்புதமான கேள்வி இது. நம்பிக்கையுடன் நமது செயல்பாடுகளை தொடங்கிடவும், தொடர்ந்திடவும், செயல்களின் இடையே ஏற்படும் சிக்கல்களை களைவதற்குமான தீர்வு இக்கேள்வியில் உள்ளது. மேலும், நமது பணிகளை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்லும் ஆற்றலும் இதற்கு உண்டு. பணி, தொழில், குடும்பம், நட்பு மற்றும் உறவுமுறை என நமது வாழ்வின் பலதரப்பட்ட நிலைகளிலும் இக்கேள்வியின் பயன்பாடு அளப்பரியது. இக்கேள்வி தவிர்க்கப்படும் வேளைகளில், நம்மால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் பெருமளவு பின்னடைவு ஏற்படுகின்றது. மேலும், நமக்கான தடைகளின் மீதான பயங்களை அறவே ஒழிக்கும் வல்லமையுடையது இது.
எப்படி?
சக பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என நம்மைச்சுற்றி உள்ளவர்களுக்கான உதவிகளை செய்யத்தூண்டும் கேள்வி இது. “எப்படி உதவ முடியும்?” என்ற கேள்வியின் மூலமாக நம்மிடமிருந்து அடுத்தவர்களுக்கான உதவிகள் சென்று சேர்க்கிறது. மேலும், இக்கேள்வியானது நம்மீதான மதிப்பையும் பணிவையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது எனலாம். நமக்கு அறிமுகம் இல்லாதவராக இருப்பவர்களிடம் கூட, இக்கேள்வி ஒருவித பிணைப்பை ஏற்படுத்தும் ஆற்றலுடையது. மற்றவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளையும், அவர்களது மனநிலையையும் நாம் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பினையும் இக்கேள்வியானது நமக்கு ஏற்படுத்தி தருகின்றது. அன்பான பெற்றோராக, பொறுப்புள்ள ஆசிரியராக நமது குழந்தைகளிடம் நம்மை தரம் உயர்த்திக்கொள்ள இக்கேள்வி உதவுகிறது. மேலும், அவர்களது மனதில் தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கவும் துணைபுரிகிறது. நல்ல உறவுமுறைகளுக்கான அடித்தளம், பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் புரிதல் போன்ற நமது வாழ்க்கைச் சூழலுக்கான அனைத்து நன்மைகளும் இதில் உள்ளது என்றால் அது மிகையல்ல எனலாம்.
எது?
எது உண்மையானது? எது சிறந்தது? எது பயனுடையது? எது சரியானது? போன்ற கேள்விகள் நமக்கான சிறப்பான தேடலுக்கு தீர்வாக விளங்குகின்றது எனலாம். நமது பணிகளில் ஏற்படும் தேவையற்ற விஷயங்களை நீக்கி, பொருத்தமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து முன்னேறிச்செல்ல இவ்வகை கேள்விகள் உதவுகின்றன. மேலும் மற்றவர்களிடம் மட்டுமின்றி, பல்வேறு சூழ்நிலைகளிலும் நாம் நம்மிடமே கேட்டுக்கொள்ளக்கூடிய கேள்விகளாகவும் இவை உள்ளன. இவற்றிற்கான பதில்கள் நமக்கு கிடைக்கப்பெறும்போது, எவ்வித தயக்கமோ பயமோ இல்லாமல் நேர்மையுடன் நமது செயல்களை தொடர்ந்து நம்மால் செயல்படுத்தி வெற்றிபெற முடிகிறது.
கேள்விகள் மட்டுமா?
கேள்விகள் மட்டுமே நம்மையும், நமது செயல்களையும் சீர்படுத்திவிடுமா என்றால் கண்டிப்பாக இல்லை. கேள்வியும் பதிலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. எவ்வளவு தரமான கேள்வியாக இருந்தாலும், அதற்கான பதிலே அக்கேள்வியை முழுமைபெறச் செய்கிறது. பெறப்படும் பதில்களின் தரமே, அவற்றைக்கொண்டு செயல்படுத்தப்படும் செயல்பாடுகளின் தரத்தையும், அதன்மூலம் கிடைக்கும் வெற்றியையும் உறுதிப்படுத்துகின்றது. ஆக, பெறப்படும் அல்லது கொடுக்கப்படும் பதில்களின் மீதும் கவனம் இருக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
திட்டங்கள் மற்றும் செயல்களின் மீதான சரியான புரிதல், செயல்களுக்கு உத்வேகமளிக்கும் ஆர்வம், முன்னேற்றத்திற்கான தொடக்கம், நல்ல உறவுமுறைகளுக்கான அடித்தளம் மற்றும் சிறந்தவற்றை கண்டறியும் திறன் போன்ற விஷயங்கள் கிடைக்கப்பெறும்போது எவ்வித இலக்கையும் எளிதில் அடைந்துவிட முடியும் என்பதே இக்கேள்விகளால் நாம் உணர்ந்து கொள்ளும் பாடம்.
ஆசிரியரின் பயனுள்ள கேள்விகளோடு, ஏன் இந்தப் புத்தகத்தை படிக்கக்கூடாது? என்ற கேள்வியும் சேர்ந்தே எழுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. பதில்களை அறிந்துகொள்ள எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றும் நாம், கேள்விகளைப்பற்றி தெரிந்துகொள்ள இதையும் படித்துதான் பார்ப்போமே!
p.krishnakumar@jsb.ac.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT