Published : 07 Mar 2023 05:56 AM
Last Updated : 07 Mar 2023 05:56 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாக டெல்லி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது, மத்திய அரசு முன்னெடுத்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், சீன ஹோலிப் பொருட்களுக்கான தேவையும் இந்த ஆண்டு சரிவைச் சந்தித்துள்ளது.
டெல்லியின் புகழ்பெற்ற சதா பஜாரைச் சேர்ந்த வியாபாரி ஜாவேத் கூறியதாவது: வண்ணங்களின் திருவிழா வான ஹோலிப் பண்டிகை நெருங்கி விட்டது. ஒவ்வொரு ஆண்டும் போலவே சந்தையின் அங்காடிகள் ஹோலி திருவிழாவை கொண்டாடுவதற்கான வண்ணப் பொடிகள், தெளிப்பான்கள் மற்றும் பிற அலங்காரப் பொருட்களால் நிரம்பி வழிகின்றன.
ஆனால், கடந்த ஆண்டு வரை சீனாவிலிருந்து இறக்குமதியாகும் ஹோலிப் பொருட்களுக்கு மக்களிடையே அதிக ஆதரவு காணப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு உள்ளூர் ஹோலி தயாரிப்புகளை வாங்குவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது, மத்திய அரசு முன்னெடுத்த தற்சார்பு இந்தியா திட்ட முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் ஹோலிப்பண்டிகையின்போது நுகர்வோர்கள் சீன தயாரிப்புகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.
ஏனெனில் அதைத்தவிர அவர்களுக்கு வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை. மேலும்,தேவையை ஈடு செய்யும் அளவிற்கும் உள்ளூர் உற்பத்தி பெருகவில்லை. ஆனால், இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஹோலி கொண்டாட்ட பொருட்களுக்கான தரம் மற்றும் வடிவமைப்பு நுகர்வோரை கவரும் வகையில் இருப்பது உள்ளூர் தயாரிப்புகளுக்கான தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறு வியாபாரி ஜாவேத் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT