Published : 05 Mar 2023 05:18 AM
Last Updated : 05 Mar 2023 05:18 AM

அதானி குழும பங்குகளில் முதலீடு செய்த வெளிநாடுவாழ் இந்திய முதலீட்டாளருக்கு 2 நாட்களில் ரூ.3,100 கோடி லாபம்

புதுடெல்லி: அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவற்றின் பங்குகள் செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளன என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டியது. இதனால் அந்த குழும பங்குகள் 50 சதவீதத்துக்கு மேல் மளமளவென சரிந்தன. இந்த விவகாரம் இந்தியாவில் புயலைக் கிளப்பி உள்ளது.

இதனிடையே, இந்த வார தொடக்கத்தில் கடனின் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தப்போவதாக அதானி குழுமம் அறிவித்தது. இதனால் அதன் பங்குகள் உயரத் தொடங்கின.
இந்த சூழ்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர் ராஜீவ் ஜெயினுக்கு சொந்தமான ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் நிறுவனம், துணிச்சலுடன் அதானி குழுமத்தின் 4 நிறுவன பங்குகளில் ரூ.15,446 கோடியை முதலீடு செய்தது. அடுத்த 2 நாட்களில் அதானி குழும பங்குகள் மளமளவென உயர்ந்தன.

இதனால், ஜிக்யூஜி முதலீடு ரூ.18,548 கோடியாக அதிகரித்தது. இதன்மூலம் ரூ.3,102 கோடி லாபம் கிடைத்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவன பங்கை கடந்த வியாழக்கிழமை ரூ.1,410.86 என்ற விலையில் வாங்கி உள்ளனர். இது வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ரூ.1,874 ஆக அதிகரித்துள்ளது. அதாவது இரண்டே நாளில் 33% உயர்ந்துள்ளது. இந்த ஒரு பங்கில் மட்டும் ரூ.1,813 கோடி லாபம் கிடைத்துள்ளது. இதுபோல அதானி போர்ட்ஸ் ரூ.596, அதானி கிரீன் எனர்ஜி ரூ.504, அதானி டிரான்ஸ்மிஷன் ரூ.668 என்ற விலையில் வாங்கி உள்ளனர். இவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அதேநேரம் ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் நிறுவனப் பங்கு, வெள்ளிக்கிழமை 3% சரிவைக் கண்டது. அதானி குழுமத்தில் முதலீடு செய்ததே இந்த சரிவுக்குக் காரணம் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x