Published : 28 Feb 2023 04:37 PM
Last Updated : 28 Feb 2023 04:37 PM
புதுடெல்லி: இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே உருவாக இருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எஸ்.ஜெய்சங்கர், ''இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே உருவாக இருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த்தின் மூலம் இரு தரப்புமே பலனடைய முடியும். இதற்கான பேச்சுவா்த்தை குறிப்பிட்ட காலவரைக்குள் முடிவடைய வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனினும், முக்கிய விவகாரங்களில் முடிவு எட்டப்படாததால் அது தொடராமல் இருந்தது. இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் தொடங்கியது.
இதைச் சுட்டிக்காட்டும் விதமாக பேசிய ஜெய்சங்கர், ''தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான இந்தியாவின் புதிய அணுகுமுறை, இதுவரை இருந்து வந்த சிக்கல்களுக்குத் தீர்வு காணும். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா உடனான இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிக குறுகிய காலத்தில் நிறைவடைந்தது. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இரு தரப்பிலும் தன்னாட்சியை வலுப்படுத்தும்; சார்ந்திருப்பதை குறைக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமை அடைந்திருக்கிறது. இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஜனநாயகத்தையும், சுதந்திரமான சந்தையையும் கொண்டிருப்பவை. இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதில், இரு தரப்பு வணிக சமூகங்களின் பங்கு முகிவும் முக்கியமானவை'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT