Published : 28 Feb 2023 04:00 AM
Last Updated : 28 Feb 2023 04:00 AM
சென்னை: சென்னை - புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை நேற்று தொடங்கப்பட்டது.
பல்வேறு நாடுகளில் இருந்து கப்பலில் வரும் சரக்குகளை சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்து, பல்வேறு ஊர்களுக்கு சாலை வழியாக கொண்டுசெல்லப்படுகிறது. இதனால், சாலை மார்க்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், புதுச்சேரி துறைமுகத்துக்கு கொண்டு வந்து, அங்கிருந்து சிறிய ரக சரக்கு கப்பல்கள் மூலம்சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரவும், பின்னர் அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, சென்னை - புதுச்சேரி இடையே சரக்கு கப்பல்போக்குவரத்து தொடங்க, கடந்த 2017-ம் ஆண்டில், சென்னை துறைமுகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், சென்னை - புதுச்சேரி இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து நேற்று தொடங்கியது. இதை சென்னை துறைமுகத்தில், துறைமுக தலைவர் சுனில் பாலிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குளோபல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ‘ஹோப் செவன்’ என்ற கப்பல் மூலம் வாரத்துக்கு இருமுறை புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே சரக்குகள் ஏற்றிச் செல்லப்படும். இந்தக் கப்பல் சென்னை - புதுச்சேரி இடையே 12 மணி நேரம் பயணிக்கும். இதில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் 106 கன்டெய்னர்கள் இடம் பெறும். அவற்றில் 86 கன்டெய்னர்கள் சாதாரண நிலையிலும், 20 கன்டெய்னர்கள் குளிரூட்டப்பட்ட நிலையிலும் இருக்கும்.
சென்னை - புதுச்சேரி இடையே சாலை மார்க்கமாக கன்டெய்னர்களை எடுத்துச் செல்லும்போது ஒரு கன்டெய்னருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகும். ஆனால்,கப்பல் மூலம் எடுத்துச் செல்லும்போது ரூ.23 ஆயிரம் மட்டுமே செலவாகும் என்பதால் பொருளாதார ரீதியாக ஏற்றுமதியாளர் களுக்கு இத்திட்டம் நல்ல பலனைத் தரும். மேலும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் காற்று மாசுபாட்டை குறைக்கவும் இத்திட்டம் உதவும் என கூறப்படுகிறது.
செய்தியாளர்களிடம் சுனில் பாலிவால் கூறும்போது, ‘‘2017-ம்ஆண்டு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டத்தின்கீழ் ரூ.40 கோடியில் புதுச்சேரிதுறைமுகம் 3.5 மீட்டர் ஆழப்படுத்தப்பட்டது. சரக்குக் கப்பல் போக்குவரத்தால் மீன்களுக்கும், மீனவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ரூ.5,500 கோடி மதிப்பி லான மதுரவாயல் - துறைமுகம் இடையிலான ஈரடுக்கு மேம்பால பணிக்கான ஒப்பந்தம் மார்ச் 7-ம் தேதி கோரப்படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை துறைமுக துணைத் தலைவர் எஸ்.பாலாஜி அருண்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT