Published : 28 Feb 2023 04:10 AM
Last Updated : 28 Feb 2023 04:10 AM
பெரியகுளம்: சித்த மருத்துவம், உணவுப் பொருள் தயாரிப்பு போன்றவற்றுக்காக இலவம் பிஞ்சுகளின் தேவை வட மாநிலங்களில் அதிகரித்துள்ளது. இதற்காக உதிரும் பிஞ்சுகளைச் சேகரிப்பதில் பெரியகுளம் பகுதி கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம், கடமலைக்குண்டு, கண்டமனூர், போடி, முந்தல், குரங்கணி, சிறைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இலவம் மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் பூக்கள் பூத்து தற்போது காய் பருவத்தில் உள்ளன. இளம் பிஞ்சுகளைப் பொருத்தவரை அணில் உள்ளிட்ட சிறு விலங்கினங்கள் கடிப்பதாலும் பலத்த காற்று, மழை உள்ளிட்ட காரணங்களாலும் மரங்களில் இருந்து அதிகளவில் உதிர்வது வழக்கம்.
தற்போது பல பகுதிகளிலும் இளம்பிஞ்சுகள் அதிகளவில் உதிர்ந்து கிடக்கின்றன. இவற்றை அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பலரும் ஆர்வமுடன் சேகரித்து வருகின்றனர். மூட்டை கட்டி வீடுகளுக்குக் கொண்டு வரும் இவர்கள் இவற்றை பல நாட்கள் வெயிலில் காய வைக்கின்றனர்.
பிஞ்சில் உள்ள நீர்ச்சத்து முற்றிலும் வெளியேறி கெட்டித்தன்மையாக மாறும்போது வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இவற்றை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் இளம் பிஞ்சினை மலமிளக்கி மூலிகை தயாரிக்கவும், மசாலா உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் பயன்படுத்து கின்றனர்.
இது குறித்து கும்பக்கரை சாலையைச் சேர்ந்த பொன்னம்மாள் கூறுகையில், `தற்போது பிஞ்சுகள் அதிகளவில் உதிர்வதால் இவற்றை எடுத்துக் காயவைத்து விற்பனை செய்கிறோம். கிலோ ரூ.80 வரை விலை போகும். தினமும் 5 கிலோ சேகரிக்கிறேன்', என்றார்.
சித்த மருத்துவர் சிவமுருகேசன் கூறியதாவது: துவர்ப்புத் தன்மை அதிகம் இருப்பதால் இது மலமிளக்கி சூரணம் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது. மொக்கு எனப்படும் சிறிய பிஞ்சுக்கு விலை அதிகம் கிடைக்கும். இதை மராட்டி மொக்கு என்றும் கூறுவார்கள். உணவுப் பொருட்களைப் பொருத்தளவில் மசாலா பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
கடினமான இறைச்சியை இளகச் செய்ய கிராமங்களில் இலவம் பிஞ்சு பயன்படுத்துவது வழக்கம். காய்ந்த பிஞ்சுகள் வடமாநிலங்களில் பாக்கெட் செய்து விற்பனை செய்வதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இயற்கைச் சாயம் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. குறிப்பாக வடமாநிலங்களுக்கே இவை அதிகளவில் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT