Published : 22 Feb 2023 12:26 AM
Last Updated : 22 Feb 2023 12:26 AM
புதுச்சேரி: சென்னை, புதுச்சேரி வருமான வரித் துறை மற்றும் புதுச்சேரி இந்திய தொழில்கள் கூட்டமைப்பு இணைந்து வருமான வரி பிடித்தம்(டிடிஎஸ்) தொடர்பான கருத்தரங்கை இன்று நடத்தின.
புதுச்சேரி தனியார் ஓட்டலில் நடைபெற்ற கருத்தரங்குக்கு இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் புதுச்சேரி தலைவர் சுரேந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு, புதுச்சேரி முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார். சென்னை முதன்மை வருமானவரி ஆணையர் ரத்தினசாமி, சென்னை வருமானவரி ஆணையர் திரிபுர சுந்தரி, புதுச்சேரி வருமான வரி கூடுதல் ஆணையர் வீரமணி, சென்னை வருமான வரி இணை ஆணையர் அர்ஜூன் மாணிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை வருமான வரி அதிகாரி ராஜாராமன், புதுச்சேரி வருமானவரி அதிகாரி கணேசன் ஆகியோர் வருமானவரி பிடித்தம் தொடர்பான பிரிவுகள் மற்றும் அதன் தொடர்புடைய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். இதில் டிடிஎஸ் - டிசிஎஸ் சம்மந்தமான தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு காணொளி தொகுப்பு தமிழில் முதல்முறையாக வெளியிடப்பட்டது.
பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரி முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருமான வரி பிடித்தத்தில் முக்கியமான வரி வருவாய் 50 சதவீத விழுக்காடு தமிழகத்தில் இருந்து தான் வருகிறது. இந்தாண்டு தமிழகத்துக்கு நாங்கள் கொடுத்த பட்ஜெட் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி. இதில் 54 ஆயிரம் கோடி வரி பிடித்தத்தில் இருந்து வர வேண்டியது. இதுவரை வரி பிடித்தத்தில் 90 சதவீதம் வரி வசூல் செய்துள்ளோம். வருமான வரி பிடித்தம் நல்ல வளர்ச்சியடைந்துள்ளது.
தேசிய அளவில் 26 சதவீதம் தான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் 36 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. மற்ற வருமான வரி வசூலிலும் 27 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளோம். இந்த 1 லட்சத்து 8 ஆயிரம் கோடியில் இதுவரை 85 ஆயிரம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதியையும் வசூலிப்பதோடு இல்லாமல், அதனையும் தாண்டிவிடுவோம். மார்ச் இறுதிக்குள் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி வசூலிப்போம் என்பது எனது கணிப்பு. அதேபோன்று வருமான வரி கட்டாதவர்களுக்காக வருமானவரி பிடித்தம் என்ற சர்வே ஒன்றை செய்து வருகிறோம். இதுவரை 62 டிடிஎஸ் சர்வே செய்துள்ளோம்.
நேரடியாகவே சம்மந்தப்பட்ட இடங்களுக்கு சென்று டிடிஎஸ் கட்டாதது குறித்து கேட்பதோடு, அபராதமும் விதித்து வருகிறோம். இதன் வழியாக தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் வரி பிடித்தம் செய்யாமலும், வரி பிடித்தம் செய்தும் கட்டாமல் இருந்த ரூ.183 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் வருமானவரி சர்வே ஒன்றை தொடங்கியுள்ளோம். இதுவரை 16 சர்வே செய்துள்ளோம். இதில் கடந்த 6 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை ரூ.240 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே யாரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அபராதம், சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும். ஆகவே அனைவரும் தங்களுடைய வரிகளை சரியான நேரத்தில் முறையாக கட்ட வேண்டியது முக்கியம்.
வருமான வரி கட்டாமல் இருந்தது, வருமான வரியை ரிட்டன்ஸில் காட்டாமல் இருந்தது, ரிட்டன்ஸ் பதிவு செய்யாமல் இருந்தது போன்றவை தொடர்பான 7 வழக்குகளில் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ரூ.660 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ.420 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முக்கியமாக வருமான வரி பிடித்தம் வளர்ந்து வருகிறது. இதுமட்டுமே ரூ.260 கோடி வந்துள்ளது.
இது கடந்த ஆண்டைவிட 36 விழுக்காடு அதிகம். புதுச்சேரி வரிவசூல், வரி பிடித்தத்திலும் வளர்ந்து வருகிறது. புதுச்சேரிக்கு கொடுத்த பட்ஜெட் முழுவதையும் நாங்கள் வசூலித்துவிடுவோம். வெளிநாடுகளில் ஹவாலா முறையில் பணம் எடுத்துச்சென்று பொருளாகவோ, கருப்பு பணமாகவோ வைத்திருப்பவர்கள் குறித்த தகவல்களை அந்த நாட்டிலிருந்தே எங்களுக்கு தருகின்றனர். இதுபோல் 150 நாடுகள் தகவல்களை தருகின்றனர். நாங்களும் அவர்களுக்கு தகவல் தருகின்றோம். இதுபோன்றவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான சட்டம் தீவிரமாக தற்போது இருக்கின்றது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT