Published : 21 Feb 2023 07:09 PM
Last Updated : 21 Feb 2023 07:09 PM

இந்தியா - சிங்கப்பூர் இடையே நேரடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை தொடக்கம்

புதுடெல்லி: இந்தியா - சிங்கப்பூர் இடையே நேரடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்காக UPI பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், சிங்கப்பூரில் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்காக PayNow பயன்படுத்தப்படுகிறது. இவ்விரண்டையும் இணைத்து இரு வழிகளிலும் இரு நாடுகளில் இருந்தும் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான விழா காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

இதில், இந்திய தரப்பில் பிரதமர் நரேந்திர மோடி, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் ஆகியோரும், சிங்கப்பூர் பிரதமர் லி சீன் லூங் மற்றும் அந்நாட்டின் நிதி கண்காணிப்பு அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் ஆகியோரும் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி மற்றும் லி சீன் லூங் ஆகியோர் முன்னிலையில், சக்தி காந்த தாஸ் - ரவி மேனன் ஆகியோர் பணபரிவர்த்தனையை தொடங்கிவைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் UPI மிகவும் நம்பிக்கையான டிஜிட்டல் பணப் பரிமாற்று முறைக்கு வழிகோலி இருப்பதாகவும், கடந்த ஆண்டு மட்டும் UPI மூலம் 126 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ரூபாய் நோட்டுக்கள் மூலம் நடைபெறும் பணப் பரிமாற்றத்தைக் காட்டிலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் அளவு வரும் காலங்களில் அதிகமாகும் என்று நிபுணர்கள் கூறுவதாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய - சிங்கப்பூர் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை இணைப்பு காரணமாக இரு நாடுகளையும் சேர்ந்த மாணவர்கள், பணியாளர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் பயனடைவார்கள் என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x