Published : 16 Feb 2023 06:24 AM
Last Updated : 16 Feb 2023 06:24 AM
புதுடெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதையடுத்து, அதானி குழுமம் ஒரே வாரத்தில் ரூ.10 லட்சம் கோடி இழப்பை சந்தித்தது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் கையிருப்பு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், தங்கள் நிதி நிலைமை வலுவாக உள்ளது என்றும் கடன்கள் முறையாக திருப்பி செலுத்தப்படும் என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் முறை கேடுகளில் ஈடுபட்டதாக, அமெரிக் காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த மாதம் 24-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. அதானி குழுமத்தின் கடன் ரூ.2.26 லட்சம் கோடியாக உள்ளது. இதில் எஸ்பிஐ, கனரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஆகிய பொதுத் துறை வங்கிகள் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கியுள்ளன. இந்தக் கடன்களை அதானி குழுமம் அடைத்து வருகிறது. இதனால், அதானி குழுமத்தின் பண இருப்பு குறைந்திருக்கக்கூடும் என்று முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போதிய பண இருப்பு உள்ளது என்று அதானி குழுமம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்குழுமம் கூறுகையில், “அதானி குழுமத் தொழில்கள் நீண்டகால ஒப் பந்தத்தின் அடிப்படையிலானவை. குறிப்பாக, அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 81 சதவீதம் உள்கட்டமைப்பு தொழில்கள் மூலம் வருகிறது. இதனால், பணப்புழக்கத்தில் பாதிப்பு இல்லை. எங்கள் நிதிநிலைமை வலுவாக உள்ளது” என்று தெரி வித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மனு: ஹிண்டன்பர்க் - அதானி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நாளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வேறு இரண்டு மனுக்களுடன் சேர்ந்து காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குரின் மனு நாளை விசாரிக்கப்பட உள்ளது.
அதானி குழுமத்தில் பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் ஜெயா தாக்குர் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT