Published : 16 Feb 2023 05:33 AM
Last Updated : 16 Feb 2023 05:33 AM

பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் வரி குறைப்பு - அரசு பரிசீலிக்க வாய்ப்பு

புதுடெல்லி: சில்லரை பணவீக்கம் அதிகரிப்பதால் அதை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி பரிந்துரைப்படி எரிபொருள் மற்றும் சோளம் போன்ற பொருட்களுக்கான வரிகளை குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கலாம் என முக்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

நாட்டின் சில்லரை பணவீக்கம் கடந்த டிசம்பரில் 5.72 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஜனவரியில் 6.52 சதவீதமாக அதிகரித்தது. பால், சோளம் மற்றும் சோயா எண்ணெய் போன்றவற்றின் விலைகள் உணவு பணவீக்கத்தை அதிகரிக்கும் என தெரிகிறது. இவற்றை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல், சோளம் ஆகியவற்றுக்கான வரிகளை குறைக்க ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. சோளத்துக்கு தற்போது 60 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கடந்த சில மாதங்களாக நிலைத்தன்மையில் உள்ளது. ஆனால் அதற்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. முந்தைய இழப்புகளை சரி கட்டவே எண்ணெய் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. நாட்டின் பெட்ரோலிய பொருட்கள் தேவை யில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியா இறக்குமதி செய்கிறது. பெட்ரோல், டீசலுக்கான வரியை மத்திய அரசு குறைத்தால், அதன் பலன் வாடிக்கையாளர்களை சென்றடைந்து பணவீக்கத்தை குறைக்க உதவும். கடந்த ஜனவரி மாத சில்லரை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் உச்ச இலக்கான 6 சதவீதத்தை தாண்டிவிட்டதால், வழக்கமான முறைப்படி சில பொருட்களுக்கு வரிகளை குறைக்கும்படி ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளன.

எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசலுக்கான வரிகளை குறைப்பது மற்றி மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக பாங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்நவிஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x