Published : 15 Feb 2023 03:49 PM
Last Updated : 15 Feb 2023 03:49 PM
மும்பை: நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை (எம்சிஎல்ஆர்) 10 அடிப்படை புள்ளிகளாக (BPS) அதிகரித்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. இந்த வட்டி விகித அதிகரிப்பின் எதிரொலியாக நுகர்வோர் கடன் வாங்குபவர்களுக்கு கடனுக்கான செலவு கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்தக் கடன் வட்டி விகிதம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் எஸ்பிஐ தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
10 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்துள்ளதன் காரணமாக நிதி அடிப்படையிலான கடன் விகிதம் 7.85 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேசமயம் ஒரு மாத கால அவகாசத்திற்கான விகிதம் 8.00 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஜனவரியில் மூன்று மாத கால அவகாசத்திற்கான விகிதம் 8.10 சதவீதம் மற்றும் ஆறு மாத கால அவகாசத்திற்கான விகிதம் 8.40 சதவீதம் என உயர்த்தப்பட்டது.
அதுவே ஓராண்டுக்கான விகிதம் 8.50 சதவீதம் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கான விகிதம் 8.60 சதவீதம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான விகிதம் 8.70 சதவீதம் என்றும் உயர்ந்துள்ளது.
எம்சிஎல்ஆர்? - வங்கியின் சார்பில் நுகர்வோருக்கு கடன்களை வழங்கும் நிதி அடிப்படையிலான கடன் விகிதம்தான் எம்சிஎல்ஆர். கடந்த 2016-ல் இந்திய ரிசர்வ் வங்கி இதனை அறிமுகம் செய்தது. பல்வேறு வகையான கடன்களின் வட்டி விகிதங்களை நிர்ணயிக்க இது கொண்டு வரப்பட்டது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக அண்மையில் (பிப்.8) இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தியது. அதன் காரணமாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதமாக உயர்ந்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த நகர்வை தொடர்ந்து பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி என பல வங்கிகள் தங்களது நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தை உயர்த்தின. தற்போது பாரத ஸ்டேட் வங்கியும் அதில் இணைந்துள்ளது. எம்சிஎல்ஆர் உயர்வு காரணமாக அதற்கு எதிராக கடன் வாங்குபவர்களுக்கு இஎம்ஐ தொகை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT