Published : 11 Feb 2023 06:45 PM
Last Updated : 11 Feb 2023 06:45 PM

“சேமிப்பைக் குறைத்து செலவைத் தூண்டும்” - வருமான வரி சலுகை குறித்து ப.சிதம்பரம் கருத்து

மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு பயன் தராது என்று கூறியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “நடுத்தர மக்களுக்கான வருமான வரி சலுகை அறிவிப்பு, சேமிப்பைக் குறைத்து மக்களை செலவு செய்ய தூண்டும் வகையில் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் 2023-2024 மத்திய பட்ஜெட் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். முதுநிலை தலைவர் ரத்தினவேல் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது: “நாட்டின் வளர்ச்சிக்கு 4 உந்து சக்திகள் தேவை. முதலாவது மக்களின் நுகர்வு. 2-வது அரசு முதலீடு, 3-வது தனியார் முதலீடு, 4-வது ஏற்றுமதி. இந்த 4 உந்து சக்திகளும் கடந்த காலங்களில் முழு திறனோடு செயல்பட்டது. தற்போது அரசு முதலீடு என்ற உந்து சக்தி மட்டுமே செயல்படுகிறது. நுகர்வு சக்தி குறைந்துவிட்டது. அதேபோல், தனியார் முதலீடு, ஏற்றுமதி குறைந்துவிட்டது.

உணவு, உரத்துக்கான மானியத்தை குறைத்தால் உணவுப் பொருட்கள் விலை உயரும். ஏழை, நடுத்தர மக்கள் நுகர்வை குறைப்பார்கள். மாநில அரசின் ஏராளமான வரி, மத்திய அரசுக்கு சென்றுவிட்டது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 331 கோடி வழங்க வேண்டும். ஆனால், சுமார் 60 ஆயிரம் கோடியை குறைத்து ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 934 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. இதனால் ஊராட்சிகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பாதிக்கின்றன. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 7.5 சதவீத வளர்ச்சி இருந்தது. கடந்த ஆட்சியை விட, இந்த ஆட்சியில் வளர்ச்சி குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி ஏழைகளை பாதிக்கிறது. இதை முதலில் வெள்ளோட்டமாக அறிமுகம் செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசு கேட்கவில்லை. உலக நாடுகள் அளவிலான வளர்ச்சி கடந்த ஆண்டைவிட குறைவது, உக்ரைன் - ரஷ்யா போரால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்படவில்லை.

நடுத்தர மக்களுக்கான வருமான வரி சலுகை அறிவிப்பு, சேமிப்பைக் குறைத்து மக்களை செலவு செய்ய தூண்டும் வகையில் உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் மக்களுக்கு பயன்தராது. இதை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திருத்தி வெளியிட வேண்டும்” என்று அவர் பேசினார்.

யாருக்கு எது சரி? - தனிநபர் வருமான வரி விதிப்பில் பழையமுறை, புதிய முறை என 2 நடைமுறைகள் உள்ளன. புதிய முறை 2020-21 நிதியாண்டில் அறிமுகம்செய்யப்பட்டது. இரு நடைமுறைகளிலும் தற்சமயம் ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது.

இந்த பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பு முறையில் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புதிய வரி விதிப்பு முறையில் 6 அடுக்காக இருந்த வரி விகிதங்கள் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த முறையில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

“இரண்டு வரி நடைமுறையிலும் சாதகமான அம்சங்களும் உள்ளன. பாதகமான சில அம்சங்களும் உள்ளன. வரிதாரர்கள் இரண்டையும் தெரிந்து கொண்டு தங்களுக்கு எது சாதகமோ அதை தேர்வு செய்ய வேண்டும். வீட்டுக் கடன் வட்டி, கல்விக் கட்டணம், இபிஎஃப், பரஸ்பர நிதி முதலீடு, ஆயுள் காப்பீடு பிரீமியம் ஆகியவற்றை செலுத்துவோர் பழைய வரி முறையை தேர்ந்தெடுப்பது நல்லது.

இதுபோன்றவற்றில் முதலீடு செய்யாதவர்கள் புதிய வரி முறையை தேர்வு செய்யலாம். குறிப்பாக, புதிதாக வேலைக்கு சேர்ந்த இளைஞர்களுக்கு இது பொருத்தமாக இருக்கும். இதுபோல, வருமான வரி மீதான அதிகபட்ச உபரி வரி (சர்சார்ஜ்) 37-லிருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரூ.5.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு இந்தமுறையின் கீழ் ரூ.19 லட்சம் வரி மிச்சமாகும். மேலும் இணையத்தில் வருமான வரி கணிப்பான்கள் மூலம், தங்கள் வருமானத்தை உள்ளீடுசெய்து எதில் வரி குறைவாக உள்ளதோ அதை தேர்ந்தெடுக்கலாம்” என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x