Published : 10 Feb 2023 09:11 AM
Last Updated : 10 Feb 2023 09:11 AM

டிஜிட்டல் கிரெடிட் சேவை நடப்பு ஆண்டில் அறிமுகம்; என்ஆர்ஐ பயன்பெற 10 நாடுகளில் விரைவில் யுபிஐ சேவை

புதுடெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டு டிஜிட்டல் கிரெடிட் சேவையை அறிமுகப்படுத்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெரிய வங்கிகளில் இருந்து தெருவோர சிறு வியாபாரிகள் கூட கடன் பெற இயலும் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

இது தொடர்பாக டிஜிட்டல் பேமென்ட்ஸ் உத்சவ் என்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "டிஜிட்டல் கிரெடிட் சேவையும் யுபிஐ சேவை போலவே அறிமுகப்படுத்தப்படும். இது பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவில் மற்றுமொரு பெரிய சாதனையாக அமையும்.

இந்த ஆண்டே டிஜிட்டல் கிரெடிட் சேவை அறிமுகப்படுத்தப்படும். அடுத்த 10 முதல் 12 மாதங்களுக்கு NCPI டிஜிட்டல் கிரெடிட் சேவையை முன்னின்று ஏற்று நடத்தும். இதன் மூலம் டிஜிட்டல் கிரெடிட் சேவை வலுவாக கட்டமைக்கப்படும்" என்றார்,

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்ட யுபிஐ சேவையை வாய்ஸ் பேஸ்ட் பேமென்ட் முறையாக மாற்றும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் விரைவில் மக்கள் தங்கள் மொழியிலேயே போனில் பேசி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். 18 இந்திய மொழிகளில் இந்த சேவையைப் பெற முடியும்.

யுபிஐ முறையை சர்வதேச பணப் பரிவர்த்தனை முறையாக மாற்றும் முயற்சியில் என்சிபிஐ இறங்கியுள்ளது. இதன் நிமித்தமாக ஏற்கெனவே சிங்கப்பூர், நேபாள், பூட்டான், பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயல்படத் தொடங்கிவிட்டது.

இப்போதைக்கு யுபிஐ சேவையானது ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், யுஏஇ, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 10 நாடுகளில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது.

இந்தியாவின் யுபிஐ முறையை சிங்கப்பூரின் பேநவ் சிஸ்டமுடன் இணைக்கும் வேலை நடந்துவருகிறது. இதனால் எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகள் எளிதாக்கப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x