எம்ஆர்எஃப் தலைவர் மேமனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
புதுடெல்லி: வாகன டயர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநாடுநேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கே.எம். மேமனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்திய டயர் துறையை முன்னகர்த்திச் சென்றவர் என்றும் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மாருதி சுசூகிநிறுவனத்தின் சிஇஓ ஹிசாஷிடகுச்சி வாழ்நாள் சாதனையாளர் விருதை மேமனுக்கு வழங்கினார்.
விருதை ஏற்று பேசிய மேமன், “டயர் தயாரிப்பில் உலக அளவில் முக்கியமான நாடாக இந்தியா உள்ளது. சர்வதேச சந்தையில் போட்டிப் போடும் அளவுக்கு தரமானடயர்களை நாம் தயாரிக்கிறோம்.
இத்துறையில் ஓர் அங்கமாக இருப்பதற்கு என் மனதில் நன்றியுணர்வே நிரம்பி இருக்கிறது. இந்த மதிப்புக்குரிய விருதுக்கு என்னை தேர்வு செய்த வாகனடயர் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
