Published : 08 Feb 2023 04:00 AM
Last Updated : 08 Feb 2023 04:00 AM

பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும்போதே உயரத் தொடங்கிய மூலப்பொருட்கள் விலை

கோவை: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மூலப் பொருட்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உற்பத்தி துறையின்கீழ் செயல்படும் தொழில் நிறுவனங்களில் முக்கிய மூலப்பொருட்களாக ஸ்டீல், காப்பர், வார்ப்படம், அலுமினியம் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமாக, மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் வரிவிதிப்பு அல்லது வரிச் சலுகையை தொடர்ந்தே விலையில் மாற்றம் ஏற்படும்.

ஆனால் கூட்டத் தொடர் நடைபெறும் போதே விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்டீல் (எம்எஸ் ரவுண்ட்) ஒரு டன் ரூ.72 ஆயிரத்திலிருந்து ரூ.80,000 ஆகவும், வார்ப்படம் ஒரு டன் ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.95,000 ஆகவும், காப்பர் ஒரு டன் ரூ.8.25 லட்சத்திலிருந்து ரூ.9.50 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.

இது குறித்து, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் விக்னேஷ் கூறுகையில், “மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாடு முழுவதும் தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தின. இதனால் 2022 ஜூலை மாதம் தொடங்கி ஐந்து மாதங்கள் வரை மூலப்பொருட்கள் விலை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

தற்போது மீண்டும் உயர தொடங்கியுள்ளது. உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் வெகுவாக குறைந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையிலும் மூலப்பொருட்கள் விலை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது தொழில்முனைவோர் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தின் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறும்போது, “மூலப்பொருட்களின் விலை குறைந்தபட்சம் 6 மாதங்களாவது மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும். தினமும் விலையில் மாற்றம் காணப்பட்டால் பணி ஆணைகளை எந்த அடிப்படையில் பெறுவது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாடு முழுவதும் தொழில்துறையினர் தொடர்ந்து விடுத்து வரும் கோரிக்கையை ஏற்று பட்ஜெட் கூட்டத்தொடரில் மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துதல், கண்காணிப்பு குழு அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதுவே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாகும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x