Published : 02 Feb 2023 05:02 PM
Last Updated : 02 Feb 2023 05:02 PM

அதானிக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கு பாதிப்பு என்ன? - ரிசர்வ் வங்கி ஆராய்வதாக தகவல்

மும்பை: அதானி குழும நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளின் பாதிப்பு நிலவரத்தை ரிசர்வ் வங்கி ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து நேரடியாக இந்தத் தகவல் உறுதி செய்யப்படவில்லை.

ஒருபுறம் அதானி நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இன்னொருபுறம் பங்குச் சந்தையில் அறிவித்திருந்த ரூ.20,000 கோடிக்கான Follow-on Public Offer (FPO)-வை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பணத்தை முதலீடு செய்திருந்த மக்களுக்கே அதனை திருப்பி வழங்குவதாகவும் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் FPO-வை தொடருவது உகந்தது அல்ல என நிர்வாகக் குழு முடிவெடுத்திருப்பதாகவும் அதானி அறிவித்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கி வங்கிகளின் நிலையை ஆய்வுக்கு உட்படுத்தும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, அதானி குழும நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் அளித்தப் பேட்டி ஒன்றில், "அதானி குழும நிறுவனங்களின் மொத்தக் கடன் மதிப்பு 30 பில்லியன் டாலர். இதில் ரொக்கக் கடன் 4 பில்லியன் டாலர். 30 பில்லியன் டாலரில் இந்திய வங்கிகளின் வாயிலாக பெறப்பட்ட கடன் மட்டும் 9 பில்லியன் டாலர்" என்று கூறியிருந்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள்தான் அதானி குழும நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் கொடுத்த நிறுவனங்களாக அறியப்படுகின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டும் அதானி குழுமத்திற்கு ரூ.7000 கோடி கடன் வழங்கியுள்ளது.

அதானி குழும நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள கடன் பற்றி இண்டஸ் இண்ட் வங்கி பங்குச்சந்தையில் ஓர் அறிக்கை அளித்துள்ளது. அதன்படி அதானி குழும நிறுவனங்களுக்கு அளித்த கடனில் மொத்த நிலுவையானது வங்கியின் கடன் புத்தகத்தில் உள்ள மதிப்பில் 0.49 சதவீதமாகும். ரொக்கப் பணம் அல்லாத மற்ற நிலுவை 0.85 சதவீதமாகும் என்று தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில்தான் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆராயப்படவிருக்கிறது.

சரிவும் அறிக்கையும்: இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானிக்கு (60) சொந்தமான நிறுவனப் பங்குகள் கடந்த 2021, 2022-ம் ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டின. இதனால் உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் முறையாக (10-ம் இடம்) கடந்த ஆண்டு நுழைந்தார். பின்னர் படிப்படியாக 2-ம் இடம் வரை முன்னேறினார்.

இந்நிலையில், அதானி குழும நிறுவன கணக்கு வழக்குகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்தஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றம் சாட்டியது. இதையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தன.

இதனால் கவுதம் அதானி யின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.2.9 லட்சம் கோடி சரிந்துள்ளது. அவரது இப்போதைய சொத்து மதிப்பு ரூ.6.9 லட்சம் கோடியாக உள்ளது. இதனால் புளூம்பெர்க் நிறுவனத்தின் உலகின் முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறி உள்ளார். அவர் இப்போது 11-ம்இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். எனினும், இந்தியாவின் முதல் பணக்காரராகவே நீடிக்கிறார். முகேஷ் அம்பானி 2-ம் இடத்தில் உள்ளார்.

இதனிடையே, அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்த பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி மற்றும் எஸ்பிஐ-க்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து எல்ஐசி சமீபத்தில் வெளியிட்ட விளக்க அறிக்கையில், “அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக எல்ஐசி ரூ.30,127 கோடியை முதலீடு செய்தது. இந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரி 27-ம் தேதி நிலவரப்படி அந்த முதலீட்டின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.56,142 கோடியாக உயர்ந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் நிர்வகித்து வரும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் அதானி குழுமத்தின் பங்கு 0.975 சதவீதம் மட்டுமே. அதாவது ஒரு சதவீதத்துக்கும் குறைவாக மட்டுமே அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அதானியின் கடன் பத்திரங்களுக்கு ‘‘ஏஏ’’ மற்றும் அதற்கும் மேலான தர மதிப்பீடுகளே வழங்கப்பட்டுள்ளன. எனவே எல்ஐசியின் முதலீடுகள் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய (ஐஆர்டிஏஐ) வழிகாட்டுதல்களுக்கு இணக்கமாகவே உள்ளது” என்று எல்ஐசி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x