Published : 02 Feb 2023 06:28 AM
Last Updated : 02 Feb 2023 06:28 AM
2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-14 நிதி ஆண்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் இது 9 மடங்கு அதிகம் ஆகும். 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரையில் ரயில்வே பட்ஜெட் தனியாக அறிவிக்கப்பட்டு வந்தது. 2017-18 நிதி ஆண்டு முதல் அது மத்திய பட்ஜெட்டுடன் சேர்த்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு விவரங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
தற்போது மத்திய அரசு, நவீன வசதிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. ஆகஸ்ட் 2023 க்குள் 75 வந்தே பாரத் ரயில்களை கொண்டு வர மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படுக்கை வசதியைக் கொண்ட 200 வந்தே பாரத் ரயில்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ரயில்வே துறை மேம்பாட்டுக்கு மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை 4.5%-ஆக குறைக்கப்படும்: அடுத்த நிதியாண்டில் வரி விதிப்பு மூலமாக கிடைக்கும் வருவாய் ரூ.23.3 லட்சம் கோடியாக இருக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை மாநிலங்கள் 3.5 சதவீத அளவுக்குள் வைத்திருக்க அனுமதிக்கப்படும். 2023-24-ம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க கடன்பத்திரங்களை சந்தையில் விற்பனை செய்வதன் மூலமாக ரூ.11.8 லட்சம் கோடி திரட்டப்படும்.
திருத்திய மதிப்பீடுகளின்படி 2022-23 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை 6.4 சதவீதமாக வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அது அடுத்த நிதியாண்டில் 5.9 சதவீதமாக குறையும். வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் ரூ.16,61,196 கோடியாக இருக்கும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு - ரூ.30 லட்சம் உச்ச வரம்பு: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான டெபாசிட் வரம்பை ரூ.30 லட்சமாக அரசு இரட்டிப்பாக்குகிறது. இதுகுறித்து நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில், “மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கான டெபாசிட் வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டத்திற்கான அதிகபட்ச டெபாசிட் வரம்பு ஒற்றைக் கணக்கிற்கு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாகவும், கூட்டுக் கணக்கிற்கு ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்படும்” என்றார்.
தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு சுங்க வரி அதிகரிப்பு: தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதிக்கான சுங்க வரி அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இதையடுத்து, சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இதற்கு, முன்பாக 2022 ஜூலையில்தான் தங்க கட்டிகள் இறக்குமதிக்கு சுங்க வரி உயர்த்தப்பட்டது.
பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால் ஆபரண தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என நகை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனை மெய்பிக்கும் விதமாக, பட்ஜெட் உரைக்கு முன்பாக 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.52,650-ஆக இருந்த நிலையில், வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு ரூ.52,900-ஆக உயர்ந்தது. அதேபோன்று, 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ.57,430-லிருந்து ரூ.57,700 ஆக உயர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT