Published : 01 Feb 2023 12:54 PM
Last Updated : 01 Feb 2023 12:54 PM

2023-24 நிதியாண்டில் மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடி: நிதியமைச்சர் தகவல்

புதுடெல்லி: 2023-24 நிதியாண்டில் மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று காலை நிதியமைச்சர் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் வெளியிட்ட தகவல்கள்:

உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி திறன் வளர்ச்சியில் முதலீடுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். 2023-24-ல் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு 37.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 7.28 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நிதிக்கொள்கைக்கான அறிக்கைகள் 2019-20-ம் நிதியாண்டில் இருந்த மூலதன செலவை விட, மூன்று மடங்கு அதிகமாகும். 2023-24 நிதியாண்டில் முக்கிய உள்கட்டமைப்பு, சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ரயில்வே, பாதுகாப்பு போன்ற முக்கிய அமைச்சகங்களும் அடங்கும். இந்த முதலீடுகளைக் கொண்டு, நாடு முழுவதும் சமமான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளும். அடுத்த 25 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, முதலீடு, புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தும்.

மாநிலங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக, 2022-23-ம் நிதியாண்டில் நிதிக்கூட்டாட்சி முறையில், மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டு, 1.3 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். இது சென்ற நிதியாண்டை விட, 30 சதவீதம் அதிகம். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதமாகும்.

வருவாய் செலவினம்: 1.20 சதவீதம் அதிகரித்து, 35.02 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வருவாய் செலவினங்களின் முக்கிய அம்சங்கள், வட்டி, மானியங்கள், அரசு ஊழியர்களின் ஊதியம், பாதுகாப்பு செலவுகள் மற்றும் நித்தி ஆயோக் மானியங்கள், மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் ஆகியவற்றிற்கு மாநிலங்களுக்கு வழங்கப்படும். மத்திய தன்னாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் ஆகியவையும் இதில் அடங்கும்.

வட்டி செலுத்துதல்: இந்தாண்டில் செலுத்த வேண்டிய வட்டி,10.8 லட்சம் கோடி ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 30 சதவீதமாகும்.

மானியங்கள்: இந்த நிதியாண்டில் உணவு, உரம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் 3.75 கோடி ரூபாயாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவீதமாகும். இது மொத்த வருவாயில் 10.7 சதவீதமாகும்.

நிதிக்குழுவுக்கான நிதி: 2023-24 நிதியாண்டில் 1.65 லட்சம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது.

ஓய்வூதியம்: ஓய்வூதிய செலவினம் கடந்த நிதியாண்டில் 2.07 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிதியாண்டில் இது 2.45 லட்சம் கோடி ரூபாயாகும். பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இந்த செலவின உயர்வுக்கு காரணம்.

மொத்த செலவினம்: இந்த நிதியாண்டின் மொத்த செலவினம் 45.03 லட்சம் கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டைவிட, 7.5 சதவீதம் அதிகமாகும்.

15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கான பகிர்வு, 9.48 லட்சம் கோடி ரூபாயாகும். மாநிலங்களுக்கான வரி பகிர்வு இந்த நிதியாண்டில் 10.21 லட்சம் கோடி ரூபாயாகும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x