Published : 01 Feb 2023 12:42 PM Last Updated : 01 Feb 2023 12:42 PM
மத்திய பட்ஜெட் 2023-24 | முக்கிய அம்சங்கள் 3: கழிவுநீர் தொட்டி, கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100% இயந்திரப் பயன்பாடு
புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2023-24ஐ தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:
கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் இது அமல்படுத்தப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலைவா மாடல் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்காக 38 ஆயிரத்து 800 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும்.
ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய மானியம் வழங்கப்படும்.
தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக 39,000 கட்டுப்பாடுகள் தளர்வு.
முதியோர் வைப்பு நிதி வரம்பு ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மாத வருமானம் பெறும் வகையில் இந்த வைப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம், சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம் ஆகியனவற்றை உறுதி செய்ய ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
பொறியியல் துறையில் பயன்படுத்துவதற்காக 5ஜி சேவையில் செயல்படக்கூடிய செயலிகளை உருவாக்க 100 ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும்.
பிஎம் ஆவாஸ் யோஜனாவுக்கான ஒதுக்கீடு 66 சதவீதம் அதிகரிக்கப்படு ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.
ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதுவரை ரயில்வேக்கு செய்யப்பட்ட ஒதுக்கீட்டில் இதுவே அதிகம்.
2047-க்குள் சிக்கில் செல் அனீமியா எனப்படும் மோசமான ரத்தசோகை நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
WRITE A COMMENT