Published : 30 Jan 2023 01:56 PM
Last Updated : 30 Jan 2023 01:56 PM

செய்த தவறுகளை தேசியவாதத்தின் பெயரில் குழப்ப முடியாது: அதானிக்கு ஹிண்டன்பர்க் பதிலடி

மும்பை: ’‘ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல். இந்திய அமைப்புகள், அதன் வளர்ச்சிகள் மீதான தாக்குதல்’ என்று அதானி குழுமம் கூறியுள்ளதற்கு, பதிலடி கொடுத்துள்ள சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம், "செய்த தவறுகளை தேசியவாதத்தின் பெயரில் குழப்பம் முடியாது. நாங்கள் எழுப்பிய ஒவ்வொரு குற்றச்சாட்டையும் இதுபோன்ற விளக்கங்களால் தவிர்க்க முடியாது” என்று கூறியுள்ளது.

மேலும், “அதானி குழுக அறிக்கையை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். இந்தியா ஒரு வளமான ஜனநாயக நாடு. சூப்பர் பவராக உருவெடுக்கும் நாடு. அதற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை அதானி குழுமம் பின்னோக்கி இழுக்கிறது என நம்புகிறோம். இந்திய தேசியக் கொடியை போர்த்திக்கொண்டு தேசத்தை அந்நிறுவனம் சூறையாடிக் கொண்டிருக்கிறது. மோசடி என்பது மோசடிதான். அதை உலகின் பெரும் பணக்காரர்கள் செய்தாலும், அது மோசடி தான்" என்று ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2 ஆண்டுகளாக அதானி குழுமத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து வந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், “அதானி குழும நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வைக் காட்டி மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளன. மேலும், அந்நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளன. அதானி குடும்ப உறுப்பினர்கள் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தது.

இதையடுத்து, அதானி குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் ஜுகேஷிந்தர் சிங் ஓர் ஆங்கில ஊடகத்திற்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில், "அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அளித்த அறிக்கை போலியானது. அதானி குழுமத்தின் அடிப்படை தொழில் முறைகளில் எந்த ஒரு தவறையும் அந்த நிறுவனத்தால் சுட்டிக்காட்ட இயலவில்லை. அவர்கள் எங்கள் தொழில்முறைகளை சரியாக அணுகாமல் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

ஹிண்டன்பர்க் நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு 413 பக்கங்களில் நாங்கள் விளக்கமளித்துள்ளோம். உள்நோக்கத்துடன், போலி சந்தையை உருவாக்கவே அந்த அறிக்கையை ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்டுள்ளது. அவர்கள் எழுப்பி 88 கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளித்துவிட்டோம். அந்தக் கேள்விகளில் இருந்தே அவர்கள் எங்கள் நிறுவனங்களைப் பற்றி எந்த ஆழமான ஆராய்ச்சியும் செய்யாமலேயே குற்றஞ்சாட்டியுள்ளனர் என்பது தெரிகிறது.

அவர்கள் எங்கிருந்தோ ஏதோ தகவல்களை வெட்டி, ஒட்டி அறிக்கையாக வெளியிட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது எங்களின் எஃப்பிஓ எனப்படும் உரிமைப் பங்குகள் மீதான தாக்குதல். இந்த அறிக்கை மூலம் அவர்கள் வேண்டுமென்றே மக்களை திசை திருப்பியுள்ளனர். எங்களால் பொய்களை ஏற்க இயலாது" என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் சரமாரி கேள்வி: அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கடந்த வாரம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடி சரிந்தன. அதானி குழுமத்தில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ உட்பட பொதுத் துறை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில் அந்நிறுவனங்களுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, “அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், விசாரணை அமைப்புகளும் ஏன் அமைதி காக்கின்றன” என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “எல்ஐசி ஒரு பொதுத் துறை நிறுவனம். அதில் இருப்பது மக்கள் பணம். மக்கள் பணத்தைக் கொண்டு எல்ஐசி, அதானி குழுமத்தில் ரூ.77 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால், இந்த முதலீட்டில் எல்ஐசிக்கு ரூ.23,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர்த்து எல்ஐசியின் பங்கு மதிப்பு ரூ.22,500 கோடி சரிந்துள்ளது. அதேபோல் அதானி குழுமத்துக்கு பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ ரூ.81,200 கோடி கடன் வழங்கியுள்ளது.

அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு காரணமாக இவ்விரு பொதுத் துறை நிறுவனங்கள் பங்கு மதிப்பு ரூ.78 ஆயிரம் கோடி சரிந்துள்ளது. ஆனால், இத்தகைய சூழலிலும் மீண்டும் எல்ஐசி ரூ.300 கோடி, எஸ்பிஐ ரூ.225 கோடி அதானி குழுமத்தில் முதலீடு செய்கின்றன. இது குறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளும் மத்திய நிதி அமைச்சகமும் இன்னும் அமைதி காக்கின்றன” என்று அவர் தெரிவித்தார்.

அதானி குழுமத்தில் எல்ஐசி மக்கள் பணம் ரூ.77 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x